பொங்கல் பண்டிகை: மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே 2 நாட்கள் சிறப்பு மலை ரெயில் இயக்கம்
பொங்கல் பண்டிகையையொட்டி மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே 2 நாட்கள் சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது.;
ஊட்டி,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு மலைரெயில் இயக்கப்பட உள்ளதாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.
அதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வருகிற 16-ந் தேதி, 18-ந் தேதி ஆகிய 2 நாட்கள் சிறப்பு மலைரெயில் இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு காலை 9.10 மணிக்கு சிறப்பு மலைரெயில் புறப்பட்டு மதியம் 2.25 மணிக்கு ஊட்டியை சென்றடைகிறது. மேலும் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு 17-ந் தேதி, 19-ந் தேதி ஆகிய 2 நாட்கள் சிறப்பு மலைரெயில் இயக்கப்படுகிறது. ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு காலை 11.25 மணிக்கு புறப்படும் சிறப்பு மலைரெயில் மாலை 4.20 மேட்டுப்பாளையத்தை வந்தடைகிறது.
இதேபோன்று குன்னூரில் இருந்து ஊட்டிக்கு 16-ந் தேதி, 17-ந் தேதி, 18-ந் தேதி, 19-ந் தேதி ஆகிய 4 நாட்கள் சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது. குன்னூரில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்படும் சிறப்பு மலைரெயில் காலை 9.40 மணிக்கு ஊட்டியை சென்றடைகிறது. மேலும் ஊட்டியில் இருந்து குன்னூருக்கு 16-ந் தேதி, 17-ந் தேதி, 18-ந் தேதி, 19-ந் தேதி ஆகிய 4 நாட்கள் சிறப்பு மலைரெயில் இயக்கப்படுகிறது. ஊட்டியில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்படும் சிறப்பு மலைரெயில் மாலை 5.55 மணிக்கு குன்னூரை சென்றடைகிறது.