மாரத்தான் போட்டி - சென்னையில் நாளை மறுநாள் போக்குவரத்து மாற்றம்
சென்னையில் மாரத்தான் போட்டி நடப்பதையொட்டி முக்கிய சாலைகளில் நாளை மறுநாள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.;
சென்னை,
பிரெஷ் ஒர்க்ஸ் இன்க், தி சென்னை ரன்னர்ஸ் ஆகியவை ஒருங்கிணைந்து சென்னை மாரத்தான் போட்டியின் 13-வது சீசனை வருகின்ற 5-ம் தேதி நடத்துகிறது. இதில் இம்முறை 25,000-க்கும் அதிகமான ஓட்டப்பந்தய வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முழு மாரத்தான் (42.195 கி.மீ), பெர்பெக்ட் 20 மைலர் - (32.186 கி.மீ), அரை மாரத்தான் (21.097 கி.மீ) மற்றும் 10 கி.மீ. ஓட்டம் என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. முழு மாரத்தான் போட்டியானது, நேப்பியர் பாலத்திலிருந்து தொடங்கி, மெரினா கடற்கரை பாதை வழியாக கலங்கரை விளக்கத்தை சென்றடையும். அதன்பிறகு மத்திய கைலாஷ், டைடல் பார்க் ஆகியவற்றைக் கடந்து கிழக்கு கடற்கரை சாலையை நோக்கி செல்லும்.
இந்த நிலையில், சென்னையில் மாரத்தான் போட்டி நடப்பதையொட்டி முக்கிய சாலைகளில் நாளை மறுநாள் (5-ம் தேதி) அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி, காமராஜர் சாலையில் போர் நினைவுச் சின்னத்தில் இருந்து காந்தி சிலை வரை அனுமதி இல்லை.
போர் நினைவிடத்தில் இருந்து திருவிக பாலம் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. ஆர்.கே.சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் திருப்பி விடப்படும். எல்.பி. சாலை சந்திப்பில் இருந்து வரும் வாகனங்களுக்கு பெசன்ட் அவென்யூ சாலையில் அனுமதி இல்லை. காந்தி மண்டபத்தில் இருந்து வரும் வாகனங்கள் ராஜீவ்காந்தி சாலை செல்ல அனுமதியில்லை. பெசன்ட் நகர் 7ஆவது அவென்யூவில் இருந்து வரும் வாகனங்கள் எலியாட்ஸ் பீச் செல்ல அனுமதியில்லை. இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.