01-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
சந்தோஷ் தேஷ்முக் படுகொலை பற்றி விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு: ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு
மும்பையில் மராட்டிய துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நிருபர்களிடம் கூறும்போது, சந்தோஷ் தேஷ்முக் படுகொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறப்பு புலனாய்வு குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. வழக்கு விரைவாக விசாரிக்கப்படும். இதற்காக கோர்ட்டில் அரசு வேண்டுகோள் வைக்கும். குற்றவாளிக்கு மரண தண்டனை கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று கூறியுள்ளார். பீட் பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்து வந்த தேஷ்முக் (வயது 45), கடத்தி, சித்ரவதை செய்யப்பட்டு சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு அரசியல் பின்னணி உள்ளது என குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவிலுக்கு புது வருடத்தின் முதல் நாளான இன்று 2 லட்சம் பக்தர்கள் பயணம் செய்துள்ளனர்.
கேரளாவில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற பஸ் ஒன்று கவிழ்ந்ததில் மாணவி ஒருவர் பலியானார். 15 பேர் காயமடைந்தனர்.
கேரளாவுக்காக புதிதாக நியமிக்கப்பட்ட கவர்னர் ராஜேந்திர அர்லேகர் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று வந்திறங்கினார். அவரை முதல்-மந்திரி பினராயி விஜயன் நேரில் சந்தித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா, மாயா ஜாய்ண்ட் உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய அசரென்கா 6(5)-7 (7), 6-2, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
நடிகர் ரஜினிகாந்துடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு
சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கு நேரில் சென்ற முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவரை சந்தித்து பேசியுள்ளார்.
புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக இந்த சந்திப்பு நிகழ்ந்தது என தகவல் வெளியாகி உள்ளது.
கல்பாக்கம் முகத்துவாரம் பகுதியில் ராட்சத அலையில் சிக்கி 2 சிறுவர்கள் பலி
கல்பாக்கம் முகத்துவாரம் பகுதியில் கடலில் குளித்து கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. இதில், மாமல்லபுரம் அருகே ராட்சத அலையில் சிக்கி 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்.