உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட யானை, மலைப்பாதையில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு
மலைப்பாதையின் 70 அடி உயரத்தில் இருந்து யானை திடீரென சரிந்து விழுந்தது.;
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 6-வது கொண்டை ஊசி பகுதியில் 15 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று, உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், எழுந்து நடமாட முடியாமல், பாறைகள் நிறைந்த பகுதியில் படுத்துக்கொண்டு இருந்தது. இதனை அறிந்த வனத்துறையினர், யானைக்கு சிகிச்சை அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, சற்றும் எதிர்பாராத வகையில், மலைப்பாதையின் 70 அடி உயரத்தில் இருந்து யானை சரிந்து விழுந்தது. இதனை சற்றும் எதிர்பார்க்காத வனத்துறையினர், யானை விழுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். எனினும், யானை விழுந்த இடத்திற்கு சென்று, அதற்கு சிகிச்சை அளிக்க முயன்றனர். ஆனால், கீழே விழுந்த வேகத்தில், சிறிது நேரத்தில் யானை உயிரிழந்தது. மலைப்பாதையில் இருந்து யானை கீழே விழும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.