அ.தி.மு.க.வின் உண்மை தொண்டன் செங்கோட்டையன் - ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் பதிவு

தனது அரசியல் குருமார்களில் ஒருவர் செங்கோட்டையன் என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் தெரிவித்துள்ளார்.;

Update:2025-03-16 14:25 IST
அ.தி.மு.க.வின் உண்மை தொண்டன் செங்கோட்டையன் - ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் பதிவு

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, கடந்த மாதம் கோவையில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதற்காக பாராட்டு விழா நடந்தது. இந்த விழா அழைப்பிதழ் மற்றும் மேடையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை எனக் கூறி, அவ்விழாவை அ.தி.மு.க.வின் மூத்த தலைவரும், எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தவருமான செங்கோட்டையன் புறக்கணித்தார்.அன்று முதல் செங்கோட்டையனின் பேச்சும், செயல்பாடுகளும் அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.

சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அறையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. சட்டசபையில் பழனிசாமியை சந்திப்பதையும், அவர் தவிர்த்தார். இந்த நிலையில், சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது நாளும் செங்கோட்டையன் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அறைக்கு செல்வதை தவிர்த்தார். அவர் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அறைக்கு செல்லாமல் சபாநாயகர் அறைக்கு சென்றார். பின்னர் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட செங்கோட்டையன் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்றார். 2வது நாளாக அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அறைக்கு செல்லாமல் செங்கோட்டையன் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்றது பேசுபொருளாகி இருந்தது.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் கேட்ட போது, ஏன் என்னை சந்திப்பதை தவிர்க்கிறார் என்பதை செங்கோட்டையனிடமே கேளுங்கள் என்று பதில் அளித்து பரபரப்பை கிளப்பினார். அதேபோல் எடப்பாடி பழனிசாமி குறித்த கேள்விக்கும் செங்கோட்டையன் பதில் அளிக்க மறுத்தார்.

இந்த சூழலில் சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய செங்கோட்டையன், "என்னை என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் ஒன்றும் செய்யப் போவதில்லை. எந்த பாதை சரியாக இருக்கிறதோ அந்தப் பாதையில் நான் சென்று கொண்டிருக்கிறேன். என் லட்சியம் உயர்வானது. என் பாதை தெளிவானது..வெற்றி முடிவானது.

சில வேடிக்கை மனிதர்களைப் போல நான் விழுந்து விட மாட்டேன். தேர்தல் நெருங்குவதால் அளந்து பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். நான் தலைவன் அல்ல தொண்டனாக கருத்தை கூறி வருகிறேன். தனியார் சுய நிதி கல்லூரிகளுக்கு அடித்தளமிட்டவர் எம்.ஜி.ஆர். அதனால் தான் உலகளவில் தலைசிறந்த பொறியாளர்கள் உள்ளனர். தலைமை எப்படி இருக்க வேண்டுமோ அதற்கு உதாரணமாக எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் அ.தி.மு.க.வை வழிநடத்தினார்கள். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் சிறப்பான ஆட்சியைத் தந்தோம்" என்று அவர் கூறி இருந்தார்.

இந்நிலையில் அ.தி.மு.க.வின் உண்மை தொண்டன் செங்கோட்டையன் என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

கொங்கு நாட்டு தங்கம்

எனது அரசியல் குருமார்களின் ஒருவர்

கழகத்தின் உண்மை தொண்டன்

அண்ணன் செங்கோட்டையன் அவர்கள் மனசாட்சியின் உணர்வுகள் வெளிப்பட தொடங்கி உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்