உடுமலை-மூணாறு சாலையில் காட்டு யானைகளிடையே சண்டை: போக்குவரத்து பாதிப்பு

உடுமலை-மூணாறு சாலையில் காட்டு யானைகள் சண்டையிட்டுக் கொண்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.;

Update:2025-03-17 04:28 IST
உடுமலை-மூணாறு சாலையில் காட்டு யானைகளிடையே சண்டை: போக்குவரத்து பாதிப்பு

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை அமராவதி வனச்சரங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள், அரிய வகை உயிரினங்கள் வசித்து வருகின்றன.

வனவிலங்குகளுக்கு உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு விடுகிறது. அதைத் தொடர்ந்து உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக அடிவாரப் பகுதியில் உள்ள நீர் நிலைகளில் தஞ்சம் அடைந்து வருகிறது.

அந்த வகையில் வெப்பத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் கடந்த சில நாட்களாக யானை உள்ளிட்ட வனவிலங்குகள் மனையடிவாரப் பகுதி, அமராவதி அணையில் முகாமிட்டு வருகின்றன. அவை மாலையில் அணைப் பகுதிக்குள் செல்வதும் காலை வேளையில் மீண்டும் அடிவாரப் பகுதிக்கு திரும்பி செல்வதுமாக உள்ளது. இதனால் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது.

அவ்வாறாக ஜோடியாக யானைகள் உடுமலை- மூணாறு சாலையில் உலா வந்தது. வாகன ஓட்டிகளை கண்டு கொள்ளவில்லை. தன் இஷ்டம்போல் ஜாலியாக சுற்றி வந்ததுடன் செல்லமாக சண்டையிட்டுக் கொண்டன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அதன்பின்னர் அந்த யானைகள் தானாகவே வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. காட்டு யானைகள் சண்டையிட்டதை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அது வைரலாகி வருகிறது.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், யானைகள் சாலையை கடக்கும் போது புகைப்படம், செல்பி எடுப்பதோ அச்சுறுத்தும் விதத்தில் ஒலி எழுப்புவதோ கூடாது. இதனால் அவை மிரட்சி அடைந்து தாக்கக்கூடும். மாறாக யானைகள் சாலை கடக்கும் வகையில் பொறுமை காத்து தூரத்திலேயே காத்திருந்து ஒருவருடன் ஒருவர் இணைந்து குழுவாக செல்ல வேண்டும். கோடை காலம் என்பதால் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது. பிளாஸ்டிக் உபயோகத்தை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்