அதிமுகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது - எடப்பாடி பழனிசாமி பேச்சு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டணியை நம்பிதான் கட்சி நடத்துகிறார் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை,
சேலம் சித்தூரில் நடந்த அ.தி.மு.க., நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
2024 மக்களவை தேர்தலில் ஒரு சதவீதம் வாக்குகள் அதிகம் பெற்று அதிமுகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கணக்கு தெரியுமோ தெரியாதா என்று தெரியவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க வாக்கு சதவீதம் குறைந்ததாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். எந்த கணக்கின் அடிப்படையில் அவர் பேசி உள்ளார் என்று தெரியவில்லை. மு.க.ஸ்டாலின் கூட்டணியை நம்பிதான் கட்சி நடத்துகிறார். தேர்தலை சந்திக்கிறார். அவர் செய்த சாதனைகளை நம்பி தேர்தலில் நிற்பதில்லை.
41 மாத தி.மு.க., ஆட்சியில் ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அனைத்து துறைகளிலும் ஊழல் தலைதூக்கியுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக லஞ்சம் பெறப்படுகிறது. இந்தியாவிலேயே ஊழல் செய்வதில் தமிழகம்தான் தற்போது முதலிடத்தில் இருக்கிறது. நான் ஜோதிடர் ஆகிவிட்டேன் என்று ஸ்டாலின் சொல்கிறார். ஸ்டாலின் அவர்களே ஜோதிடம் பலிக்கும். 2026ல் அ.தி.மு.க., ஆட்சிக்கு வரும். குடும்ப அரசியல், வாரிசு அரசியலுக்கு 2026-ம் ஆண்டில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.