அதிமுகவின் கூட்டல் கணக்கை வேறு ஒருவர் போடுகிறார் -அமைச்சர் தங்கம் தென்னரசு
மடிக்கணினி விவகாரத்தில் கவனக்குறைவாக மனக்கணக்கு போட்டுள்ளதாக தங்கம் தென்னரசு பேசியதற்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.;

சென்னை,
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்ற நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:- ரூ.10,000-க்கு தரமான லேப்டாப் எப்படி வாங்க முடியும் என தங்கமணி நேற்று கேள்வி எழுப்பி இருந்தார். மடிக்கணினி திட்டத்துக்கு ரூ.2,000 கோடி முதற்கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு மடிக்கணினி மதிப்பு ரூ.20,000 என்ற அளவில் வாங்கப்படும். தங்கமணி அவர்கள் கூட்டல் கழித்தல் கணக்கை இங்கே போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் உங்கள் கட்சி கூட்டல் கழித்தல் கணக்குகளை எங்கோ அமர்ந்து கொண்டு இன்னொருவர் போடுகிறார்.
ஏனெனில் அதிமுக தொண்டர்களின் எதிர்காலத்தை வேறு யாரோ தீர்மானித்து கொண்டிருக்கின்றனர். எங்களோடு நீண்ட காலமாக அதிமுகவினர் களமாடி வருகின்றனர். அதிமுகவை பறித்துக்கொள்ள நினைப்பவர்களிடம் கவனமாக இருங்கள். வேறிடத்தில் இருந்து வரும் கணக்குகளை அதிமுகவினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இதனைக் கேட்டு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் சிரிக்கிறார். பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. அதிமுகவின் மடியில் உள்ள கனத்தை வேறு ஒருவர் பறிக்க முயற்சி நடக்கிறது. இதனை உங்கள் மீது கொண்ட உரிமை அன்பின் அடிப்படையில் கூறுகிறேன்" எனக் கூறினார். மடிக்கணினி விவகாரத்தில் கவனக்குறைவாக மனக்கணக்கு போட்டுள்ளதாக தங்கம் தென்னரசு பேசியதற்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதன்பின் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி "நாங்கள் கூட்டல் கணக்கில் ஏமாற மாட்டோம்" எனக் கூறினார். இதற்கு பதில் கொடுக்கும் விதமாக பேரவை முடியும் நேரத்தில் பேசிய முதல் அமைச்சர் ஸ்டாலின், "கூட்டல் கணக்கில் ஏமாறாமல் இருந்தால் அதிமுகவுக்கு எங்கள் வாழ்த்துக்கள்" என்று கூறினார்.