25 நாட்களுக்கு பிறகு தீவிர அரசியலில் களமிறங்கும் விஜய்?
2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது.;

சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை அண்மையில் தொடங்கினார். இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந்தேதி பிரமாண்டமாக நடந்தது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாநாட்டை தொடர்ந்து 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது. அதற்கேற்ப அரசியல் வியூகங்களை விஜய் அமைத்து வருகிறார். மேலும் தமிழகம் முழுவதும் கட்சிக்கு மாவட்ட செயலாளர்கள், புதிய நிர்வாகிகளை விஜய் நியமித்து வருகிறார்.
இந்த நிலையில், 25 நாட்களுக்கு பிறகு தீவிர அரசியலில் தவெக தலைவர் விஜய் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தற்போது நடித்து வரும் ஜனநாயகன் படப்பிடிப்பு இன்னும் 25 நாட்களில் நிறைவடைய உள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பை முடித்த கையோடு பூத் கமிட்டி மாநாடு, சுற்றுப்பயணம், மண்டல மாநாடு, பொது கூட்டங்களை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் ஏப்ரல் இறுதியில் பூத் கமிட்டி மாநாட்டை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.