வறுமை ஒழிப்பு திட்டங்களை தீவிர முனைப்புடன் செயல்படுத்த வேண்டும் - செல்வப்பெருந்தகை

நாட்டில் வருமான ஏற்றத்தாழ்வுகளும், சமத்துவமின்மையும் தலைவிரித்தாடி வருகிறது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.;

Update:2025-03-21 14:32 IST
வறுமை ஒழிப்பு திட்டங்களை தீவிர முனைப்புடன் செயல்படுத்த வேண்டும் - செல்வப்பெருந்தகை

கோப்புப்படம் 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 2013-ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி மக்கள் தொகையில் 82 சதவீதத்தினருக்கு மலிவு விலையில் உணவு தானியங்கள் வழங்கப்படுகிற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டமும் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வாய்ப்பு வழங்கும் உறுதி திட்டமும் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டு, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்தது. இதன்மூலம் 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே இருந்து மீட்கப்பட்டனர். இது டாக்டர் மன்மோகன்சிங் ஆட்சியின் சாதனை என்று உலக நாடுகள் கூட பாராட்டியது. இதுகுறித்து சமீபத்தில் உரையாற்றிய சோனியா காந்தி அதற்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியை ஒதுக்காமல் இருப்பதை சுட்டிக்காட்டி, குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.400 ஆக உயர்த்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அந்த இரு திட்டங்களையும் முடக்குகிற வகையில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது.

சமீபத்தில் தன்னார்வலர்கள் சுப்ரீம் கோர்ட்டில் தொடுத்த வழக்கில் நீதிபதிகள் மத்திய அரசின் வறுமை ஒழிப்பு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்கள். இதுபற்றி கூறும்போது, வளர்ச்சி மற்றும் தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளதாக மத்திய அரசு கூறும் புள்ளி விவரங்களை வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் முரண்பாடு மேலிடுகிறது. சில மாநிலங்களில் சுமார் 70 சதவீத மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருகின்ற நிலையில், அதிக வளர்ச்சி விகிதம் மற்றும் தனிநபர் வருமானம் குறித்த மத்திய அரசின் கருத்துகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு 19 மார்ச் 2022 அன்று கேள்வி எழுப்பியது. மேலும் மானிய விலையில் அத்தியாவசிய தானியங்களை வழங்கும் விநியோக திட்டங்கள் உண்மையில் ஏழைகளை சென்றடைந்ததா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். எங்கள் மாநிலத்தில் தனிநபர் வருமானம் உயர்ந்துவிட்டது, மிக நன்றாகவே வளர்ச்சி அடைந்து விட்டோம் என்று சில மாநிலங்கள் அவற்றின் வளர்ச்சியை விளம்பரம் செய்கின்றன. ஆனால், அம்மாநிலங்களில் 70 சதவீத மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருகிறார்கள் என்று மத்திய அரசின் புள்ளி விவரங்கள் கூறுகிறது. 70 சதவீத மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருகின்ற நிலையில் தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளதாக கூறுவதில் ஒரு அப்பட்டமான முரண்பாடு இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சூர்யகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

ஏழை மக்களுக்கான உணவு பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட மானிய விலை ரேசன் பொருட்கள் முறையானது. ஆனால், மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்திக் கொள்வதற்கான அரசாங்கங்களின் திட்டமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறையின் வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்குவது உள்ளிட்ட மக்கள் நலத்திட்ட நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்வதற்கான எண்ணற்ற வழிகாட்டுதல்களை கோவிட் 19, 2020 பெருந்தொற்று காலத்திலிருந்தே அவ்வப்போது சுப்ரீம் கோர்ட்டு வழங்கி வருகிறது. அதேநேரத்தில் அதிகரித்து வரும் சமத்துவமின்மையிலிருந்து இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக வழக்கு தொடுத்த மனுதாரர்கள் சார்பில் ஆஜரான பிரசாந்த் பூஷன் வாதங்களை முன்வைத்திருக்கிறார். ஒரு சிலர் லட்சக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புடையவர்களாக உள்ளனர். அதேநேரத்தில் பெரும்பான்மையினர் ஒரு நாளைக்கு ரூ.30 முதல் 40 வருமானத்தில் உயிர் வாழ்கின்றனர். அந்தளவிற்கு ஏற்றத்தாழ்வும், சமத்துவமின்மையும் அதிகரித்துள்ளது என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி பயனாளிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு உணவு தானியங்கள் விநியோகிப்பதற்காக ரேஷன் கார்டுகள் வழங்குவதிலும் தீவிர முன்னுரிமை காட்டப்பட வேண்டும். ஆனால், துரதிருஷ்டவசமாக நிர்வாகத்துறை பல்வேறு நிலைகளில் செயல்படுகிற காரணத்தால் ரேஷன் பொருட்கள் மக்களை சென்றடையும் காலத்தில் பலவிதமான குளறுபடிகள் நடந்து வருகின்றன. இதனால் பல ஏழை குடும்பங்கள் ஏழ்மையில் வாழ்ந்து வருகின்றன. ஊழல் மற்றும் தவறான மேலாண்மை நிர்வாகம் காரணமாக பொது விநியோக திட்டத்தை நடைமுறைப்படுத்துவது கூடாது என்று நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. ஏழைகளுக்கு ரேஷன் பொருட்கள் சென்றடைவதை உறுதிப்படுத்திட வேண்டும். அரசமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவின் கீழ் கண்ணியமான முறையில் வாழ்வதற்கான அடிப்படை உரிமையின் அடிப்படையில் ஒரு நாளைக்கு குறைந்தது இரு வேளை உணவை பெற்றிட ஏழை மக்களுக்கு உரிமை உண்டு என்று சுட்டிக்காட்டியதை மோடி அரசு உணர்ந்ததாக தெரியவில்லை.

அதேபோல, தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உணவு தானியங்கள் வழங்க மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்கீழ் மக்கள் தொகையில் 81.35 சதவீத பேர் பயனடைந்து வருகின்றனர். அங்கன்வாடி திட்டத்தின் கீழ் கூடுதலாக 11 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர். மேலும் 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்காத நிலையில் விடுபட்டவர்களையும் சேர்த்து மேலும் 22 கோடி பேர் பயனடையக் கூடிய வாய்ப்பு இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு சுட்டிக் காட்டியதற்கு பிறகு மத்திய பா.ஜ.க. அரசு வறுமை ஒழிப்பு திட்டங்களை நிறைவேற்ற உரிய நிதியை ஒதுக்க வேண்டும். ஆனால், நிதியை ஒதுக்காமல் வறுமை ஒழிப்பு திட்டங்களை முடக்குவதன் மூலம் நாட்டில் வருமான ஏற்றத்தாழ்வுகளும், சமத்துவமின்மையும் தலைவிரித்தாடி வருகிறது. இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய அறிவுறுத்தலின்படி பிரதமர் மோடி ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வறுமை ஒழிப்பு திட்டங்களை தீவிர முனைப்புடன் செயல்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்