சென்னையில் வங்கிக்குள் புகுந்து ஊழியரை வெட்டிய நபரால் பரபரப்பு
வங்கிக்குள் புகுந்து அங்கிருந்த ஊழியரை வெட்டிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை,
சென்னை தி.நகர் பர்கிட் சாலை பகுதியில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இன்றைய தினம் வழக்கம்போல் வங்கி ஊழியர்கள் தங்கள் பணியை மேற்கொண்டு வந்த நிலையில், வாடிக்கையாளர் போல் வங்கிக்குள் நுழைந்த நபர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அங்கிருந்த வங்கி ஊழியரை வெட்டியுள்ளார்.
இதில் வங்கி ஊழியரின் காதில் படுகாயம் ஏற்பட்டது. வங்கி ஊழியரை வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்வரை சக ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மடக்கிப் பிடித்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாம்பலம் போலீசார் காயமடைந்த வங்கி ஊழியரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, வங்கி ஊழியரை வெட்டிய நபரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.