ஈரோடு: விசைத்தறி கூடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
ஈரோட்டில் செயல்பட்டு வரும் விசைத்தறி கூடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
ஈரோடு,
தமிழ்நாட்டில் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ள விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியும், சலுகைகளை அறிவித்தும் வருகிறது.
இந்த நிலையில், விசைத்தறி தொழில் மேம்பாட்டிற்காகவும், இப்பணியில் ஈடுபட்டு வரும் நெசாவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடவும், விசைத்தறி கூடத்திற்கு நேரில் சென்று அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்திடும் பொருட்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஈரோடு மாவட்டம், பிச்சாண்டம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் இயங்கி வரும் இரண்டு விசைத்தறி கூடங்களுக்கு நேரில் சென்றார். விசைத்தறி கூடங்களை பார்வையிட்ட முதல்-அமைச்சர், அதன் செயல்பாடுகள் குறித்தும், நெசவாளர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
விசைத்தறி கூடங்களுக்கு இலவச மின்சார யூனிட் உயர்த்தியது பலனளிக்கிறதா என முதல்-அமைச்சர் கேட்டறிந்தார். அப்போது, முதல்-அமைச்சரிடம் மாதம் ஒருமுறை மின் பயன்பாடு கணக்கெடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிகழ்வின்போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் ஈரோடு கலெக்டர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.