அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) அறிவியல் தொழில்நுட்ப முதுநிலை ஆலோசகராக சென்னை தமிழர் ஸ்ரீராம் கிருஷ்ணனை நியமித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு சார்பில் முதற்கட்டமாக 84 வீரர், வீரங்கனைகளுக்கு பல்வேறு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அரசு ஊழியரின் சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள், தனிப்பட்ட விவரங்கள் அல்ல என்று சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட நீர்வளத்துறை உதவிப் பொறியாளர் காளிப்பிரியனின் சொத்து விபரங்களை, ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில், 2 மாதங்களில் இதனைப் பரிசீலித்து முடித்துவைக்க மாநில தகவல் ஆணையத்திற்கு நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தின கூட்டத்தில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர்.
நினைவு தினத்தன்று ஒரு கி.மீ தூர நினைவு தின பேரணி நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளோம். காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் உள்பட அனைத்துக் கட்சி தலைவர்களையும் நேரில் அழைக்க உள்ளோம் என அண்ணா அறிவாலயத்தில் எல்.கே.சுதீஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மருத்துவ படிப்பு - சிறப்பு கவுன்சிலிங் நடத்த உத்தரவு
மருத்துவர்கள் காலியிடங்களை நிரப்ப இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான சிறப்பு கவுன்சிலிங் டிசம்பர் 30-ம் தேதிக்குள் நடந்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் டாக்டர்கள் பற்றாக்குறை இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது. லக்னோவை சேர்ந்த மருத்துவ கல்லூரி தாக்கல் செய்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு பணிகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பணி நியமன உத்தரவு கடிதங்களை வழங்கினார். நாட்டின் வளர்ச்சி அதன் இளைஞர்கள் மூலமாகவே நிகழ்கிறது என்று கூறினார்.
திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஓங்கூர் அருகே ரெயில் சென்று கொண்டிருந்த போது, தண்டவாளத்தில் இருந்து அதிக சத்தம் வந்ததால் ரெயிலை லோகோ பைலட் நிறுத்தினார். சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த ரெயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளது.
தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்யும் பணி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரெயிலால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ்
தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நெல்லை நீதிமன்றம் வாயில் முன் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டநிலையில் நீதிமன்றங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்பட்டுள்ளது.
அரசு கண்காட்சியில் காவி உடையில் திருவள்ளுவர்
சென்னை கோட்டூர்புரத்தில் அரசு கண்காட்சியில் காவி நிறத்தில் திருவள்ளுவர் ஓவியம் வரையப்பட்டு இருந்தது. மாணவர் ஒருவர் திருவள்ளுவரின் முழு உருவ சிலையை காவி நிறத்தில் வரைந்தது காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது நீக்கப்பட்டது. கண்காட்சியில் மாணவர்கள் பல்வேறு விதமான திருவள்ளுவர் படங்களை வரைந்து காட்சிப்படுத்தியுள்ளனர்.
திருவள்ளூர்: பழவேற்காடு அருகே கோரைக்குப்பம் கிராமத்தில் கடல் சீற்றம் காரணமாக அடுத்தடுத்து 4 படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 10க்கும் மேற்பட்ட மீனவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். மீன்பிடி வலைகள் கடலில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.