திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகிற 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.;

Update:2024-12-10 11:50 IST

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான வருகிற 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இந்த நிலையில், கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகிற 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை மகா தீபத் திருவிழா நாளான 2024-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று மாவட்டத்தில் உள்ள மாநில அரசின் ஆளுகைக்கு உட்பட்டு இயங்கும் அனைத்து அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் (தேர்வுகளுக்கு இடையூறு இல்லாமல்) அரசு சார்புடைய நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக 21-ம் தேதி (சனிக்கிழமை) மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து அலுவலகங்களும் வேலை நாளாக செயல்படும். மேலும் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் அனைத்தும் குறைந்தபட்ச எண்ணிக்கையுடனான ஊழியர்களைக் கொண்டு இயங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்