தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மார்ச் மாதம் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜனவரி மாதத்திற்குள் கட்சியின் உட்கட்டமைப்பு பணிகளை முடிக்கவேண்டும் என்றும் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம்: தனியார் பள்ளியின் செப்டிக் டேங்கில் விழுந்த குழந்தை பலி
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் கழிவுநீர் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழந்தது. விளையாடிக்கொண்டிருந்தபோது, கழிவுநீர் தொட்டியின் மூடி திடீரென உடைந்ததால் குழந்தை தவறி உள்ளே விழுந்துள்ளது. குழந்தையின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படகு விபத்தில் 8 பேர் பலி
இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மலுகு மாகாணத்தில், பயணிகளை ஏற்றிச் சென்ற வேகப் படகு கடலில் மூழ்கியது. இதில் 8 பேர் பலியாகினர். கடலில் மிதந்துகொண்டிருந்த பெரிய மரத்தடி மீது மோதியதால் படகு சேதமடைந்து கவிழ்ந்ததாக மீட்புக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
இளைஞர்களின் எதிர்காலத்தை பா.ஜ.க. அழிக்கிறது: ராகுல் குற்றச்சாட்டு
பீகாரில் போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், தோல்வியுற்ற ஆட்சேர்ப்பு செயல்முறையால் இளைஞர்களின் எதிர்காலத்தை பா.ஜ.க. அழித்துக்கொண்டிருப்பதாகவும் விமர்சித்தார்.
டெல்லியில் வளர்ச்சித் திட்டங்கள்.. பிரதமர் தொடங்கி வைத்தார்
டெல்லியில் உலக வர்த்தக மையம் மற்றும் பல்வேறு குடியிருப்புகள் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்காக அசோக் விகார் பகுதியில் கட்டப்பட்ட ஸ்வபிமான் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு பெற்ற பயனாளிகளிடம் சாவிகளை ஒப்படைத்தார்.
யூனியன் கார்பைடு கழிவுகளை அழிக்கும் நடைமுறைக்கு எதிர்ப்பு- 2 பேர் தீக்குளித்தனர்
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் விஷ வாயு கசிவு ஏற்பட்ட யூனியன் கார்பைடு தொழிற்சாலையின் கழிவுகள், தார் மாவட்டம் பீதாம்பூர் தொழிற்பேட்டைக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக அழிக்கும் பணி நடைபெறுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்றைய போராட்டத்தின்போது 2 நபர்கள் திடீரென தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடல் முழுவதும் தீக்காயமடைந்த அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கதிர் ஆனந்த் எம்.பி. வீட்டில் சோதனையை தொடங்கிய அமலாக்கத்துறை
காட்பாடியில் எம்.பி. கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். காலையியே அதிகாரிகள் சென்ற நிலையில், கதிர் ஆனந்த் வெளிநாட்டில் இருந்ததால் அவரது அனுமதிக்காக சுமார் 7 மணி நேரம் வீட்டிற்கு வெளியில் காத்திருந்தனர். கதிர் ஆனந்திடம் இருந்து முறைப்படி அனுமதி வரப்பெற்றதும் பிற்பகல் சோதனையை தொடங்கினர்.
மதுரையில் இருந்து சென்னைக்கு பேரணியாக செல்ல முயன்ற பாஜக மகளிரணியினர் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக மதுரையில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற பா.ஜ.க. மகளிர் அணி நிர்வாகிகள் குஷ்பு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.