தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ.58 ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.58,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.7,260-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சவுமியா அன்புமணி மீது 2 பிரிவுகளில் வழக்கு
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து பா.ம.க. மகளிர் சங்கம் சார்பில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற சவுமியா அன்புமணி உள்ளிட்ட பா.ம.க.வினர் நேற்று கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் சவுமியா அன்புமணி உள்ளிட்ட 297 பேர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவையில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து: எரிவாயு கசிந்ததால் பரபரப்பு
கோவை மாவட்டம் அவினாசி மேம்பாலம் அருகே சுமார் 20 மெட்ரிக் டன் எடை கொண்ட எரிவாயு கொண்டு சென்ற டேங்கர் லாரி இன்று அதிகாலை 3 மணியளவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் டேங்கர் பகுதி சேதம் அடைந்ததால் உள்ளே இருந்த எரிவாயு கசிந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் துரிதமாக செயல்பட்டு லாரியிலிருந்து கசிந்த எரிவாயு மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். சுமார் 4 மணிநேரத்திற்கும் மேலாக தொடர்ந்த மீட்பு பணிகளையடுத்து தற்போது கசிவு தடுக்கப்பட்டது. லாரியை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வீட்டில் இன்று அமலாக்கத்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது.