பல்கலைக்கழக மானியக் குழு அத்துமீறக் கூடாது - ராமதாஸ்

பல்கலைக்கழகங்களின் அன்றாட செயல்பாடுகளில் மானியக் குழு தலையிட முயல்வது நல்லதல்ல என்று ராமதாஸ் கூறியுள்ளார்.;

Update:2025-01-08 10:37 IST

சென்னை,

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பதில் மாநில அரசுகளுக்கு உள்ள அதிகாரங்களை முற்றிலுமாகப் பறிக்க பல்கலைக்கழக மானியக் குழு திட்டமிட்டிருக்கிறது. துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோரின் நியமனத்தில் தாங்கள் உருவாக்கவிருக்கும் விதிகளை பின்பற்ற மறுக்கும் பல்கலைக் கழகங்களின் பட்டம் வழங்கும் உரிமையும், அங்கீகாரமும் பறிக்கப்படும் என்று மானியக்குழு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மாநில அரசுகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் தன்னாட்சியைப் பறிக்கும் வகையில், பல்கலைக்கழக மானியக் குழு இல்லாத அதிகாரங்களையெல்லாம் எடுத்துக் கொள்வது கண்டிக்கத்தக்கது.

பல்கலைக்கழக மானியக்குழு (பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் கல்விப் பணியாளர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கான குறைந்தப்பட்சத் தகுதிகள் மற்றும் உயர்கல்வியின் தரத்தைப் பராமரிப்பதற்கான நடவடிக்கைகள்) விதிமுறைகள் 2025-க்கான வரைவை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது. அதன்மீது உயர்கல்வித்துறையினரும், பொதுமக்களும் ஒரு மாதத்தில் கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும், அந்தக் கருத்துகளை ஆய்வு செய்து வரைவு விதிகளில் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டு அவை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் மானியக்குழு அறிவித்திருக்கிறது.

துணைவேந்தர் நியமனம் குறித்து மானியக்குழு வகுத்துள்ள வரைவு விதிகள் அனைத்தும் நியாயமற்றவை; அதுமட்டுமின்றி அவை மானியக்குழுவின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டவை ஆகும். துணைவேந்தர்கள் நியமனத்திற்கான தேர்வுக்குழுவை இனி பல்கலைக்கழக வேந்தர்களான கவர்னர்கள்தான் நியமிப்பார்கள்; தேர்வுக்குழுவில் கவர்னரின் பிரதிநிதி, மானியக்குழுவின் பிரதிநிதி, பல்கலைக்கழக ஆட்சிக்குழுவின் பிரதிநிதி ஆகிய மூவர் இடம் பெறுவர். கல்வியாளர்கள் மட்டுமின்றி, பொது நிர்வாகத் துறையில் அனுபவம் பெற்றவர்களும் துணைவேந்தர்களாக நியமிக்கப்படலாம் என்றும் மானியக்குழு விதிகளில் கூறப்பட்டுள்ளது.

துணைவேந்தர் நியமன விதிகளை விட, பேராசிரியர்கள் மற்றும் துணைவேந்தர்கள் நியமனத்தில் மானியக் குழு வகுத்துள்ள விதிகளை பின்பற்ற மறுக்கும் கல்வி நிறுவனங்களுக்கான தண்டனைகள்தான் மிகக் கொடியவை. விதிகளை பின்பற்றாத பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும், பட்டம் வழங்கும் உரிமை பறிக்கப்படும், மானியக்குழுவின் திட்டங்களில் பங்கேற்க தடை விதிக்கப்படும், திறந்த நிலை மற்றும் தொலைத்தொடர்பு முறையிலும், ஆன்லைன் வாயிலாகவும் பட்டப்படிப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அப்பட்டமான அதிகார அத்துமீறல் ஆகும்.

துணைவேந்தர்கள் நியமனத்தைப் பொறுத்தவரை பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி முக்கியம் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தனித்தனி சட்டங்களின் அடிப்படையில அமைக்கப்பட்டவை. அந்த சட்டங்களில் கூறப்பட்டிருப்பதைப் போன்றுதான் துணைவேந்தர் தேர்வுக் குழுவை அமைக்க முடியும். அதில் தலையிட பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு எந்த உரிமையும் கிடையாது. பல்கலைக்கழக மானியக் குழு என்பது ஓர் ஒழுங்கு முறை அமைப்பு மட்டும்தான். பல்கலைக்கழகங்களின் கட்டமைப்புகள் மற்றும் மனிதவளம் தொடர்பான தேவைகளையும், தகுதிகளையும் நிர்ணயிப்பதற்கு மானியக் குழுவுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், ஒரு துணை வேந்தர் இப்படித்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்த மானியக்குழுவுக்கு எந்த அதிகாரமும், உரிமையும் கிடையாது. இதை உணர்ந்திருக்கும் போதிலும், இது போன்ற நடைமுறைக்கு ஒவ்வாத கட்டுப்பாடுகளை விதிப்பது மாநில அரசின் அதிகாரத்திலும், பல்கலைக்கழகத்தின் தன்னாட்சியிலும் தலையிடும் செயலாகும். இவற்றை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோரின் நியமனம் குறித்த விதிகளை கடைபிடிக்காவிட்டால், பல்கலைக்கழகத்தின் பட்டம் வழங்கும் அதிகாரத்தைப் பறிப்போம் என்பது அப்பட்டமான மிரட்டல் ஆகும். அதற்கான அதிகாரத்தை பல்கலைக்கழக மானியக் குழு எங்கிருந்து பெற்றது என்பது தெரியவில்லை. துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் நியமனம் குறித்த விதிகளை உருவாக்கும் போது, அதற்காக கல்வியாளர்களைக் கொண்ட குழுவை அமைத்து, அவர்களின் பரிந்துரைப்படிதான் மானியக்குழு செயல்பட முடியும். மாறாக, பல்கலைக்கழக மானியக் குழு தன்னிச்சையாக விதிகளை வகுத்து மக்களிடம் கருத்து கேட்க முடியாது.

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மாநில அரசின் நிதி மற்றும் நிலத்தில் உருவாக்கப் பட்டவை. பல பல்கலைக்கழகங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. அவற்றுக்கு தீர்வு காண பல்கலைக்கழக மானியக்குழு எந்த வகையிலும் உதவுவதில்லை. மாறாக, மாநில அரசுகள்தான் தேவைப்படும் நிதியில் சிறிதளவையாவது வழங்கி உதவுகின்றன. பல்கலைக்கழகங்களுக்கு மானியக் குழு வழங்கும் நிதி கடந்த சில ஆண்டுகளில் மிகக் கடுமையாக குறைக்கப்பட்டு விட்டது. பல்கலைக் கழகங்களின் வளர்ச்சிக்கு எந்த வகையிலும் பங்களிக்காத மானியக் குழு, அவற்றின் அன்றாட செயல்பாடுகளில் தலையிடுவதற்கு எந்த உரிமையும் இல்லை. மானியக்குழு அதன் அத்துமீறலை கைவிட வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளும், ஆராய்ச்சிப் பணிகளும் கவலையளிக்கும் வகையில்தான் உள்ளன. பல்கலைக்கழகங்களின் தரத்தையும், ஆராய்ச்சித் திறனையும் அதிகரிப்பதற்கு பல்கலைக்கழக மானியக்குழு ஆலோசனைகளை வழங்கலாம். அவை ஏற்கத்தக்கவையாக இருந்தால் அவற்றை பல்கலைக்கழகங்களும் செயல்படுத்தலாம். அதை விடுத்து பல்கலைக்கழகங்கள் அனைத்தையும் தொடக்கப் பள்ளிக்கூடங்களைக் போல நினைத்துக் கொண்டு, அவற்றின் அன்றாட செயல்பாடுகளில் தலையிடுவதற்கு பல்கலைக்கழக மானியக் குழு முயல்வது நல்லதல்ல. மாநில அரசு மற்றும் பல்கலைக் கழகங்களின் தன்னாட்சியை மதித்து இந்த வரைவு விதிகளை மானியக்குழு திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்