'போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி; 25 ஆண்டுகால கனவு நிறைவேறியது' - திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 25 ஆண்டுகால கனவு தற்போது நிறைவேறியுள்ளது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கடலூர்,
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகளில் 'இந்தியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில், போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-
"சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு முழுமையாக ஒத்துழைப்பை வழங்கிய, பிரசாரம் செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. தலைவர்கள், தொண்டர்கள், தோழமை கட்சிகளைச் சார்ந்த கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் தோழர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
2 தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம் இந்த தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறும் வாய்ப்பை பெற்றுள்ளது. 1999-ல் இருந்து இந்த இயக்கம் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு தேர்தல் களத்தில் நாங்கள் பணியாற்றி வந்துள்ளோம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 25 ஆண்டுகால கனவு தற்போது நிறைவேறியுள்ளது.
இந்த அங்கீகாரத்தை வழங்கிய சிதம்பரம், விழுப்புரம் மக்களவை தொகுதியைச் சேர்ந்த மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுக்கு அடுத்தபடியாக இன்று மாநில அளவிலான அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெறுகிற பரிணாமத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அடைந்திருக்கிறது."
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.