19-ம் தேதிக்கு பிறகு துணை முதல்-அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின்..? அமைச்சர் ராஜகண்ணப்பன் சூசகம்

19-ம் தேதிக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சர் ஆவார் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

Update: 2024-08-10 03:19 GMT

ராமநாதபுரம்,

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் நேற்று காலை தொடங்கி வைத்தார். முதல்-அமைச்சர் இந்த திட்டத்தை தொடங்கி வைத்ததும், மாவட்டங்கள்தோறும் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

இதன் ஒருபகுதியாக ராமநாதபுரத்தில் நடைபெற்ற தமிழ்ப் புதல்வன் திட்ட விழாவில் பங்கேற்ற பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பதவி குறித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த விழாவில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், "அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வகிக்கும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் திறன் வளர்ச்சி திட்டம் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது" என்றவர், "அவர் துணை முதல்-அமைச்சர் " என்று கூறினார்.

பின்னர் சட்டென்று, "வரும் 19ஆம் தேதிக்குப் பிறகுதான் உதயநிதியை துணை முதல்-அமைச்சர் என்று கூற வேண்டும். அதற்கு முன்னதாக நாங்கள் சொல்லக்கூடாது" என்று தெரிவித்தார். இந்த சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, தமிழக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் சிலர் உதயநிதியை துணை முதல்-அமைச்சராக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்