கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற மாணவருக்கு நேர்ந்த துயரம்

கன்டியங்காட்டில் உள்ள சிவன் கோவிலுக்கு மாணவர் சாமி கும்பிட சென்றார்.

Update: 2024-06-26 03:52 GMT

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள கன்டியங்காடு நடுத்தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். விவசாயி. இவருடைய மனைவி செந்தில்குமாரி. இவர்களுடைய ஒரே மகன் வீரமணி(வயது17). இவர் நாட்டுச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு கல்லூரியில் சேர இருந்தார்.

நேற்று அவர் கன்டியங்காட்டில் உள்ள சிவன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அந்த கோவிலில் குடமுழுக்கு விழாவுக்கான திருப்பணிகள் நடந்து வந்தன. இதற்கான பணிகளில் அரியலூரை சேர்ந்த வீரமுத்து மகன் தினேஷ்குமார் என்பவர் ஈடுபட்டிருந்தார். அவர் கோவிலை சுத்தம் செய்வதற்காக எந்திரம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு அறுந்து கிடந்த மின் வயர் மீது எதிர்பாராதவிதமாக தண்ணீர் பட்டதில் தினேஷ்குமார் மீது மின்சாரம் பாய்ந்து, அவர் தூக்கி வீசப்பட்டார். அவரை காப்பாற்ற முயன்ற வீரமணி மீதும் மின்சாரம் பாய்ந்ததில் அவரும் தூக்கி வீசப்பட்டார். அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே வீரமணி பரிதாபமாக உயிரிழந்தார்.

தினேஷ்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்