புதிய அட்டவணை அடுத்த ஆண்டு வெளியிடப்படும்-ரெயில்வே அதிகாரிகள் தகவல்
புதிய அட்டவணை மூலம் தென்மாவட்டங்களுக்கு கூடுதல் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.;
சென்னை,
ரெயில்வேயில் ஆண்டுதோறும் ஜூலை அல்லது ஆகஸ்டு மாதம் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், பயணிகள் ரெயிலுக்கான கால அட்டவணை வெளியிடப்படும். இந்த அட்டவணையில் புதிய ரெயில்களின் இயக்கம், கூடுதல் ரெயில் நிறுத்தம், ரெயில்கள் இயங்கும் நேரம் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெறும்.
இந்த நிலையில், புதிய ரெயில்வே அட்டவணை அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 1-ந் தேதி வெளியிடப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சில நிர்வாக காரணங்களுக்காக நீட்டிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பு அனைத்து பொது மேலாளர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. எனவே டிசம்பர் 31-ந் தேதி வரை பழைய ரெயில்வே அட்டவணை பின்பற்றப்படும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதே போல, புதிதாக வர இருக்கிற அட்டவணைக்கு தென்மாவட்ட மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கடும் கூட்ட நெரிசலுடன் செல்வதால் பயணிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். புதிய அட்டவணை மூலம் தென்மாவட்டங்களுக்கு கூடுதல் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.