போதை ஊசி பயன்படுத்தி மயங்கி கிடந்த வாலிபர்கள் - சேலத்தில் பரபரப்பு

போதை ஊசி, மாத்திரைகள் சப்ளை செய்வது யார்? என்பது குறித்தும் உளவுத்துறை மூலமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Update: 2024-10-06 01:29 GMT

சேலம்,

சேலம் டவுனில் ஆனந்தா பாலம் பகுதியில் மாநகராட்சி சார்பில் புதிதாக 5 மாடி கொண்டதாக அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை இந்த வாகன நிறுத்துமிடம் திறக்கப்படாமல் உள்ளது.

இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் வாலிபர்கள் சிலர் அடிக்கடி உள்ளே புகுந்து மது அருந்துவது, கஞ்சா, குட்கா பயன்படுத்துவது, போதை ஊசி போடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்தது. இதனை அங்கு காவலாளியாக வேலை செய்து வரும் 2 பேரும் உறுதிப்படுத்தினர்.

இந்நிலையில், நேற்று 2 வாலிபர்கள் அந்த அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்திற்கு சென்றனர். அவர்கள் மேல்மாடிக்கு சென்று போதை ஊசியை தங்களது கையில் ஏற்றி போதையில் மயங்கி கிடந்துள்ளனர். இதைப்பார்த்த ஒருவர், அவர்களுக்கு தெரியாமல் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்தார். வீடியோ எடுப்பதை பார்த்த அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போதை ஊசிகளை பயன்படுத்திய வாலிபர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போதை ஊசி, மாத்திரைகள் எப்படி கிடைக்கிறது? கஞ்சா சப்ளை செய்வது யார்? என்பது குறித்தும் உளவுத்துறை மூலமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்