இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-03-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று கூறும்போது, வரும் கோடை காலத்தில் 22 ஆயிரம் மெகா வாட் மின் தேவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், தமிழகம் முழுவதும் தடையின்றி மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என கூறினார்.
திருப்பூரில் முறையான ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் வரை டயாப்பர் தொழிற்சாலையின் கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்கும்படி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.
ஹமாஸ் அமைப்புக்கு எதிராக புதிதாக தாக்குதல் நடவடிக்கையை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளது. இந்த சூழலில், காசா நகரில் உள்ள பல பகுதிகளில் இருந்து வெளியேறும்படி மக்களுக்கு, இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டு உள்ளது.
கோவை, நீலகிரி, தேனி, ஈரோடு, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், நெல்லை மற்றும் குமரி ஆகிய 10 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
பெசன்ட் நகர் மின் மயானத்தில், மறைந்த நடிகர் மனோஜின் உடலை தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பொதுமக்கள், திரையுலகினர், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், மறைந்த நடிகர் மனோஜின் இறுதி ஊர்வலம் இன்று மாலை நடந்தது. இந்நிலையில், நடிகர் மனோஜின் உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
போக்சோ வழக்கில் சிக்கியதற்காக இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியரின் இடமாற்ற உத்தரவில் தலையிட முடியாது என்றும் தெரிவித்தது.
புதுக்கோட்டை, மாங்காடு கிராமத்தில் கடந்த 23-ந்தேதி மின்சாரம் தாக்கி வீரபாண்டி என்பவர் பலியானார். இதனை தொடர்ந்து அவருடைய குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் இதுவரை 25 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என தமிழக அமைச்சர் ஐ. பெரியசாமி கூறியுள்ளார்.
எட்டயபுரத்தில் உள்ள, மகாகவி பாரதியார் பிறந்து வளர்ந்த இல்லத்தின் மேற்கூரை சமீபத்தில் பெய்த மழையால் சேதமடைந்தது.
இந்நிலையில், நினைவில்லத்தில் சீரமைப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. பழமை மாறாமல் சீரமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த பணிகள் முடிவடைந்ததும், பொதுமக்கள் பார்வையிட திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து விட்டு, சென்னை திரும்பிய பின் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் பேசும்போது, தமிழகத்தில் கூட்டணி குறித்து எந்த கட்சியாவது நிலையாக இருந்தது உண்டா? என கேள்வி எழுப்பினார். கூட்டணி என்பது அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றங்களை கொண்டிருக்கும் என்றும் கூறினார்.