471 நாட்களுக்குப் பிறகு ஜாமீன்.. புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார் செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்குப் பிறகு ஜாமீன் கிடைத்ததையடுத்து தி.மு.க.வினர் உற்சாகமாக கொண்டாடினர்.
ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
என் மீது அன்பும் நம்பிக்கையும் கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி செலுத்துவேன் என்றும் செந்தில் பாலாஜி கூறினார்.
தொண்டர்களின் ஆரவார வரவேற்பைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி காரில் ஏறி புறப்பட்டார். அப்போது இந்த வழக்கில் இருந்தும் விடுதலை ஆவேன் என தெரிவித்தார்.
ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் செந்தில் பாலாஜியை வரவேற்றனர்.
சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி, வழக்கறிஞர்களை சந்தித்து பேசினார்.
நீதிமன்ற உத்தரவு நகல் புழல் சிறையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த உத்தரவின்படி சிறைத்துறை அதிகாரிகள், செந்தில் பாலாஜியை விடுவித்தனர். இதனால் 471 நாள் சிறைவாசம் முடிந்து, செந்தில் பாலாஜி வெளியே வந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மலர்களை தூவி வரவேற்றனர். கருப்பு, சிவப்பு துண்டும் அணிவித்து மகிழ்ந்தனர்.
செந்தில் பாலாஜியை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். புழல் சிறைக்கு வெளியே திரண்டிருந்த தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
செந்தில் பாலாஜியை சிறையில் இருந்து விடுவிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் உத்தரவாதமாக அவரது உறவினர்கள் தியாகராஜன், சிவப்பிரகாசம் ஆகியோர் தலா 25 லட்சம் ரூபாய் அளித்தனர். ஆனால், அவர்களின் வயது தொடர்பான முரண்பாடுகளால் உத்தரவாதங்களை முதலில் நீதிமன்றம் ஏற்க மறுத்தது.
அதேசமயம், செந்தில் பாலாஜியை ஜாமீனில் விடுதலை செய்வதற்கு அமலாக்கத்துறை ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. ஜாமீன் உத்தரவாதம் தொடர்பாகவும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் உத்தரவாதங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. எனவே, இன்னும் சில மணி நேரங்களில் செந்தில் பாலாஜி, சிறையில் இருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கு விசாரணைக்காக செந்தில் பாலாஜி, புழல் சிறையில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜரானார்.
ஜாமீன் உத்தரவாதத்தை விசாரணை அதிகாரியிடம் எப்படி தாக்கல் செய்ய முடியும் என செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.
“செந்தில் பாலாஜியை இன்று வெளியே விடக்கூடாது என முடிவு செய்துவிட்டதுபோல் செயல்படுகிறீர்கள். ஜாமீன் உத்தரவாதம் தொடர்பான உத்தரவில் குழப்பம் இருப்பின் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டு விளக்கம் பெறுகிறோம்” என்றும் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.