அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் குடும்ப நல நிதியுதவி: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த 171 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.;
சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உழைப்போர் திருநாளாம் "மே" தினத்தை முன்னிட்டு, அதிமுக அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதியுதவி வழங்கும் திட்டம் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டு, நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு மே தினத்தின்போது, நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நன்நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் அப்போது நிதியுதவி வழங்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. இந்நிலையில், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில் இருந்தும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய பிற மாநிலங்களில் இருந்தும் போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கங்களில் இருந்தும், தேர்ந்தெடுக்கப்பட்ட 171 நலிந்த தொழிலாளர்ளுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம், மொத்தம் 1 கோடியே 71 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும். இதற்கான பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது.
இவர்களுக்கான நிதியுதவி, கழகத்தின் 53-ஆவது ஆண்டு தொடக்க நாளான 17.10.2024 (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு, எம்.ஜி.ஆர். மாளிகையில் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.