கள்ளக்குறிச்சி சம்பவம்; மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி பதவி விலக வேண்டும் - எல்.முருகன் வலியுறுத்தல்

அமைச்சர் முத்துசாமி உடனடியாக பதவி விலகுவதன் மூலம்தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தை கொடுக்க முடியும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-23 02:58 GMT

சென்னை,

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தி.மு.க. அரசு மெத்தனமாக நடந்து கொண்டதாக எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் விஷ சாராய உயிரிழப்பு சம்பவத்திற்கு பொறுப்பேற்று தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி பதவி விலக வேண்டும் என மத்திய இணை மந்திரி எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"மரக்காணத்தில் நடந்த கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டார்கள். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த சம்பவமும் அதே போல நீர்த்துப்போய்விடக் கூடாது.

எனவே விசாரணை ஆணையம் அமைத்துவிட்டோம் என்பதோடு இல்லாமல், தமிழக அரசு தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சிக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் முத்துசாமி உடனடியாக பதவி விலகுவதன் மூலம்தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தை கொடுக்க முடியும்."

இவ்வாறு எல்.முருகன் தெரிவித்தார்.

Full View

 

Tags:    

மேலும் செய்திகள்