பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் அதிக தொகுதிகள் வென்றிருப்போம் - எஸ்.பி.வேலுமணி

அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம் என்று எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டினார்.

Update: 2024-06-06 08:16 GMT

கோவை,

கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தோல்விகளில் இருந்து மீண்டு பெரும் வெற்றி கண்ட இயக்கம் அதிமுக. 2019 மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்தோம், 2021 சட்டமன்ற தேர்தலில் கோவையில் வென்றோம். 2019-ல் பெற்ற வாக்குகளைவிட இந்த முறை அதிக வாக்குகளை அதிமுக பெற்றுள்ளது.

அதிமுகவிற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. வாக்களித்த மக்களை எப்போதும் மதிக்கக்கூடிய கட்சி அதிமுக. அதிமுக தோல்வி மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க உள்ளோம். பாஜக கூட்டணியைவிட அதிமுக கூட்டணி அதிக வாக்குகளை பெற்றுள்ளது.

அதிமுக குறித்து அண்ணாமலை கொஞ்சம் அதிகமாக பேசிவிட்டார். அண்ணா, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி குறித்து குறைகூறி பேசியவர் அண்ணாமலை. கூட்டணியில் இருக்கும்போது கூட்டணி தர்மத்தை அதிமுக கடைபிடிக்கும். விலகினால் அவ்வளவுதான். அதிமுக மீதான விமர்சனங்களை தவிர்த்துவிட்டு அண்ணாமலை தனது தலைவர் பதவியை கவனிக்க வேண்டும்

பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 30-35 தொகுதிகள் வரை வென்றிருப்போம். தமிழிசை, எல்.முருகன் இருந்தபோது அதிமுக-பாஜக கூட்டணி நன்றாகதான் இருந்தது; கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. அண்ணாமலை பாஜக மாநில தலைவர் ஆன பிறகுதான், பாஜக-அதிமுக கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம்.

2014ல் கோவையில் பாஜக சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் வாங்கிய வாக்குகளை விட குறைவான வாக்குகளையே அண்ணாமலை வாங்கியுள்ளார். 2026 சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியமைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்