பலத்த மழை எதிரொலி.. சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு

10-க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படவும், தரையிறங்கவும் முடியாமல் சேவை பாதிக்கப்பட்டது.

Update: 2024-06-18 19:01 GMT

மீனம்பாக்கம்,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலை திடீரென இடி மின்னல் சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக அந்த நேரத்தில், சென்னை விமான நிலையத்திற்கு தரையிறங்க வந்த விமானங்கள் தரை இறங்க முடியாமல், வானில் வட்டமடித்து பறந்து தத்தளித்துக்கொண்டு இருந்தன.

அதன்படி, துபாயில் இருந்து 262 பயணிகளுடன் சென்னையில் தரையிறங்க வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், 314 பயணிகளுடன் தோகாவில் இருந்து வந்த கத்தார் ஏர்லைன்ஸ் விமானம், அபுதாபியில் இருந்து 248 பயணிகளுடன் வந்த எத்தியார்ட் ஏர்லைன்ஸ் விமானம், லண்டனில் இருந்து 368 பயணிகளுடன் வந்த பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்குவதற்கு அனுமதி கிடைக்காததால் தவித்தன.

மேலும் புனேயில் இருந்து 140 பயணிகளுடன் இறங்க வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மற்றும் பிராங்பர்ட்டில் இருந்து சென்னை வந்த லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமானம், சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் என 7 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரம் வானில் வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தன.

இதையொட்டி, துபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. மற்ற விமானங்கள் நீண்ட நேரம் வானத்தில் வட்டமடித்து பறந்து கொண்டு இருந்த நிலையில், சுமார் 1 மணி நேரத்தில் மழை ஓய்ந்ததும், விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக, சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கின.

விமான சேவைகள் பாதிப்பு

அதைப்போல சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய சிங்கப்பூர், பிராங்பர்ட், அபுதாபி, சார்ஜா, தோகா, துபாய், டெல்லி, ஆமதாபாத் ஆகிய 8 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

சென்னை விமான நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த இடி, மின்னல் சூறைக்காற்று மழை காரணமாக 15 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.

 

Tags:    

மேலும் செய்திகள்