ஆகஸ்ட் 2 வரை மின்சார ரெயில்கள் வழக்கம்போல் இயங்கும்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
பராமரிப்புப்பணிகளுக்காக நாளை முதல் மின்சார ரெயில் சேவை ரத்து என்ற அறிவிப்பை திரும்பப்பெற்றது தெற்கு ரெயில்வே.;
சென்னை,
தாம்பரம் ரெயில்வே பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் நாளை (செவ்வாய்கிழமை) முதல் ஆகஸ்ட் 14-ந்தேதி வரையில் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரெயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படும் நேர அட்டவணையில் மாற்றம் செய்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் நாளை (23-ந்தேதி) முதல் 26-ந்தேதி வரை மற்றும் 29-ந்தேதி முதல் ஆகஸ்டு 2-ந்தேதி வரை பகல் நேர மின்சார ரெயில் சேவை வழக்கமான கால அட்டவணையின்படி இயக்கப்படும்.
* மேலும், 23-ந்தேதி (நாளை) முதல் ஆகஸ்டு 2-ந்தேதி வரை இரவு 10.30 மணி முதல் நள்ளிரவு 2.30 மணி வரை ஏற்கனவே அறித்திருந்தது போல் மின்சார ரெயில்கள் இயங்காது. அதற்கு மாறாக ஏற்கனவே அறிவித்தது போல சென்னை கடற்கரை - பல்லாவரம், பல்லாவரம் - சென்னை கடற்கரை, கூடுவாஞ்சேரி - செங்கல்பட்டு, செங்கல்பட்டு - கூடுவாஞ்சேரி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.
* இதற்கிடையே, வரும் 27-ந்தேதி (சனிக்கிழமை) மற்றும் 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் மின்சார ரெயில் சேவைகள் காலை மற்றும் இரவு நேரங்களில் முன்னதாக வெளியிட்ட அறிவிப்பின்படி ரத்து செய்யப்படுகிறது.
* இதையடுத்து, ஆகஸ்ட் 3-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை மின்சார ரெயில் சேவைகள் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏற்கனவே அறிவித்தது போலவே பகல் மற்றும் இரவு நேரங்களில் ரத்து செய்யப்படுகிறது. அதற்கு மாற்றாக ஏற்கனவே அறிவித்திருந்தது போலவே பகல் மற்றும் இரவு நேரங்களில் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.