அத்திக்கடவு- அவினாசி திட்டம்: முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்
அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.;
சென்னை,
ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய 3 மாவட்ட விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக அத்திக்கடவு- அவினாசி திட்டம் உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டு திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது ரூ.1,916 கோடியே 41 லட்சம் செலவில் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
இந்தநிலையில் அத்திக்கடவு- அவினாசி திட்டம் நாளை (சனிக்கிழமை) தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதற்கான தொடக்க விழா பவானி காலிங்கராயன் அணைக்கட்டு முதலாவது நீரேற்று நிலையத்தில் நடைபெற உள்ளது. இந்த திட்டத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைக்கிறார்.
இத்திட்டம் செயல்பாட்டுக்கு வருவதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள வறட்சியான பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள், குட்டைகளுக்கு குழாய்கள் மூலம் தண்ணீரை கொண்டு வந்து நிரப்பப்படும். இதனால் விவசாய கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்சனைக்கும் தீர்வு காணப்படுவதோடு 3 மாவட்டங்களில் உள்ள 24 ஆயிரத்து 468 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்திக்கடவு- அவினாசி திட்டம் நாளை நனவாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.