95 பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

குரூப் -1 பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 95 பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Update: 2024-06-25 07:45 GMT

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து, கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வு முகமைகள் வாயிலாக 32,774 நபர்களுக்கும் பல்வேறு அரசுத் துறைகளில் நேரடி நியமனம், உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் என பல்வேறு அமைப்புகளின் வாயிலாக 32,709 நபர்களுக்கும் என மொத்தம் 65,483 நபர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-1 பணிகளில் 21 துணை ஆட்சியர்கள், 26 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 25 உதவி ஆணையர்கள் (வணிக வரிகள்), 13 கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், 7 உதவி இயக்குநர் (ஊரக வளர்ச்சி) மற்றும் 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் என மொத்தம் 95 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில், 14 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

பணிநியமன ஆணைகளை பெற்றுக் கொண்டவர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியினை தெரிவித்துக்கொண்டனர். பணிநியமன ஆணைகள் பெற்றுக் கொண்ட பயிற்சி அலுவலர்களுக்கு வரும் 1-ம் தேதி முதல் சென்னை, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் அடிப்படைப் பயிற்சி தொடங்க உள்ளது.

இந்நிகழ்ச்சியில், நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மனிதவள மேலாண்மைத்துறை செயலாளர் க. நந்தகுமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்