கழுகுகளுக்கு ஆபத்தான மருந்துகள் குறித்து விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

கழுகுகளுக்கு ஆபத்தான மருந்துகளை கால்நடைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Update: 2024-06-11 08:57 GMT

சென்னை,

தமிழகத்தில் கழுகுகள் அதிகமாக உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சட்டவிரோதமாக கால்நடைகளுக்கு செலுத்தப்படும் மருந்துகளால், அந்த விலங்குகள் இறந்த பிறகு அவற்றின் உடல்களை சாப்பிடும் கழுகுகள் அதிக அளவில் உயிரிழப்பதாகவும், அந்த மருந்துகளை பயன்படுத்துவதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று வன விலங்குகள் ஆர்வலர் சூர்யகுமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், நீதிபதி முகமது சபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளை கழுகுகள் பாதுகாப்பு மையங்களாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டதற்கு, அவர்கள் இதுவரை எந்த பதிலையும் அனுப்பவில்லை என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கழுகுகளை பாதுகாப்பதற்காக மருந்துகளை தடை செய்வது குறித்து மத்திய அரசுதான் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் அந்த மருந்துகளை கால்நடைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்