உ.பி. முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி இடையே மோதல்?; பரபரப்பு தகவல்

உ.பி. முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.;

Update:2024-07-17 21:32 IST

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்-மந்திரியாக யோகி ஆதித்யநாத் செயல்பட்டு வருகிறார். அதேபோல், துணை முதல்-மந்திரியாக கேசவ் மவுரியா செயல்பட்டு வருகிறார். மேலும், உத்தரபிரதேச பாஜக தலைவராக பூபேந்திர சவுதிரி செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி 36 இடங்களை கைப்பற்றியது. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் காங்கிரஸ், சமாஜ்வாதி தலைமையிலான கூட்டணி 43 தொகுதிகளை கைப்பற்றியது.

கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி 64 தொகுதிகளை கைப்பற்றிய நிலையில் இந்த நாடாளுமன்ற தேர்தலில் 36 தொகுதிகளை மட்டும் கைப்பற்றியதால் அக்கட்சியினர் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றாத விவகாரம் பாஜகவினர் மத்தியில் மோதலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், துணை முதல்-மந்திரி மவுரியா இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, கடந்த வாரம் லக்னோவில் பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் செயல்திறன் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அந்த கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், வாக்குகள் மாறியதாலும் அதீத நம்பிக்கையில் இருந்ததாலும் இந்த முறை நாம் எங்கோ தவறு செய்துவிட்டோம். இதனால், நாடாளுமன்ற தேர்தலில் நாம் எதிர்பார்த்த முடிவுகள் வராமல் நம்மை காயப்படுத்தியுள்ளது என்று கூறினார்.

இதே கூட்டத்தில் பேசிய உ.பி. துணை முதல்-மந்திரி கேசவ் மவுரியா, அரசை விட கட்சி பெரியது, கட்சி எப்போதுமே பெரியதுதான். என் வீட்டின் கதவுகள் அனைவருக்காகவும் எப்போதும் திறந்தே இருக்கும். முதலில் நான் பாஜக தொண்டன் அதன்பின்னர் தான் துணை முதல்-மந்திரி என்று கூறினார்.

இதனால் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளால் உ.பி. முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் பரவத்தொடங்கின. இந்த சந்தேகங்களை மேலும் உறுதிபடுத்தும் வகையில் முதல்-மந்திரி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற மந்திரிசபை கூட்டங்களில் துணை முதல்-மந்திரி மவுரியா பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகின.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தலைநகர் டெல்லியில் பாஜக தேசியத்தலைவர் ஜேபி நட்டாவை கட்சி தலைமையகத்தில் உ.பி. துணை முதல்-மந்திரி மவுரியா மற்றும் உ.பி. பாஜக மாநிலத்தலைவர் பூபேந்திர சவுதிரி இன்று தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அதேபோல், பிரதமர் மோடியையும் உ.பி. பாஜக மாநிலத்தலைவர் சவுதிரி இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவிற்கு பொறுப்பேற்று மாநிலத்தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக சவுதிரி பிரதமர் மோடியிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதிரி - பிரதமர் மோடி சந்திப்பிற்கு பின் பிரதமர் மோடியை அமித்ஷா சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது உ.பி. பாஜகவில் மாற்றங்கள் செய்வது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, உத்தரபிரதேசத்தில் காலியாக உள்ள 10 சட்டசபை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலுக்கு முன் இந்த மாற்றம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் உ.பி. கவர்னர் ஆனந்திபென் பட்டேலை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று சந்தித்தார். முதல்-மந்திரி தலைமையிலான மந்திரிசபையில் மாற்றம் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியான நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது. அதேவேளை, மழைக்கால கூட்டத்தொடரை கூட்டுவது தொடர்பாக கவர்னரை முதல்-மந்திரி சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒட்டுமொத்தமாக நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த மோசமான பின்னடைவால் உத்தரபிரதேச பாஜக தலைமையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் துணை முதல்-மந்திரி கேசவ் மவுரியா இடையே மறைமுக மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மோதல் காரணமாக உத்தரபிரதேச பாஜக தலைமையில் விரைவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்