பெண் டாக்டர் கொலை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
கொல்கத்தா பெண் டாக்டர் கொலை சம்பவத்தை சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.;
புதுடெல்லி,
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெண் மருத்துவரின் மரணத்துக்கு நீதி கேட்டு அரசு, டாக்டர்கள் அன்றாட பணிகளை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில், கொல்கத்தா பெண் டாக்டர் கொலை குறித்து சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கில் சி.பி.ஐ. நடத்தி வரும் விசாரணையில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றம், ஆர்.ஜி.கர் மருத்துவமனை நிர்வாகம், மேற்கு வங்காள அரசின் செயல்பாடுகள், மாநில போலீசாரின் முதல்கட்ட விசாரணை ஆகியவைகுறித்து சுப்ரீம் கோர்ட்டு விரிவாக விசாரணை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு முக்கிய உத்தரவுகளை பிறப்பிக்கும் என்றும் மருத்துவர்களின் போராட்டம் தொடர்பாக முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.