ஒடிசா விமான நிலையத்தில் சிறுத்தையை பார்த்ததாக கூறிய பெண் - வனத்துறையினர் தீவிர சோதனை
ஒடிசா விமான நிலையத்தில் சிறுத்தையை பார்த்ததாக பெண் ஊழியர் கூறியதையடுத்து வனத்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.;
புவனேஸ்வர்,
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தில் கழிவுகளை கொட்டும் பகுதிக்கு அருகே ஒரு சிறுத்தையை பார்த்ததாக விமான நிலையத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் விமான நிலைய அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இது குறித்து வனத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் விரைந்து வந்து விமான நிலைய வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் நரியின் கால்தடம் கண்டறியப்பட்டதாகவும், ஆனால் சிறுத்தை நடமாட்டத்திற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் அங்குள்ள மரங்களில் சில கோழிகளை கட்டி வைத்துள்ளதாகவும், இரை தேடி சிறுத்தை வந்தால் அதை பிடிப்பதற்கு பொறி வைத்திருப்பதாகவும் வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். புவனேஸ்வர் விமான நிலையத்தில் இதற்கு முன்பு கடந்த 2019-ம் ஆண்டு ஒரு சிறுத்தை பிடிபட்டது. பின்னர் அந்த சிறுத்தை, அருகில் உள்ள சந்தகா வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.