இந்துக்கள் மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால்.. வங்காளதேசத்துக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் எச்சரிக்கை
நாம் மின்சாரத்தை நிறுத்தினால் வங்காளதேசம் இருளில் மூழ்கிவிடும் என சுவெந்து அதிகாரி பேசினார்.;
வங்காளதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இதனை கண்டித்து இந்தியாவில் போராட்டம் நடைபெறுகிறது. குறிப்பாக வங்காளதேச எல்லையை ஒட்டியுள்ள மேற்கு வங்காளத்தில் தீவிரமாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தியா-வங்காளதேச எல்லை அருகே உள்ள பசிர்ஹத் நகரின் ஹஜ்ரதலா பகுதியில் இன்று ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மூத்த தலைவரும், மேற்கு வங்காள சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சுவெந்து அதிகாரி பேசுகையில், வங்காளதேசம் தனது போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால், இந்துக்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தாவிட்டால் "வங்காளதேசத்தை எப்படி சமாளிப்பது" என்று இந்தியாவுக்குத் தெரியும் என்று எச்சரித்துள்ளார்.
பெரும்பாலான தேவைகளுக்கு இந்தியாவை நம்பி உள்ள வங்காளதேசத்திற்கான ஏற்றுமதியை காலவரையின்றி தடைசெய்யவேண்டியிருக்கும் என்றும் எச்சரித்தார்.
"நாம் மின்சாரத்தை நிறுத்தினால் வங்காளதேசம் இருளில் மூழ்கிவிடும். நம்மிடம் 40 போர் விமானங்கள் ஹசிமாராவில் நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டை அனுப்பினால் போதுமானது. நமது பிரதமர் அயோத்தி பிரச்சனைக்கு தீர்வு கண்டு, 370-வது பிரிவை ரத்து செய்தார். வங்காளதேசம் நமது பொறுமையை சோதிக்கக் கூடாது. 1971-ல் அந்த நாடு சுதந்திரம் பெறுவதற்காக நாம் 17,000 ராணுவ வீரர்களை தியாகம் செய்தோம். தேவைப்பட்டால் மீண்டும் அதேபோன்ற நடவடிக்கை எடுப்போம்" என்றும் சுவெந்து அதிகாரி பேசினார்.