வயநாடு நிலச்சரிவு: 408 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை: தொடரும் மீட்புப்பணி

வயநாட்டில் அடர்ந்த வனப்பகுதியில் உடல்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.;

Update:2024-08-08 07:02 IST

வயநாடு,

வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி, அட்டமலை, வெள்ளரிமலை, புஞ்சிரிமட்டம் ஆகிய மலைக்கிராமங்களை கடந்த மாதம் 30-ம் தேதி பயங்கர நிலச்சரிவு புரட்டிப்போட்டது. மண்ணில் புதைந்தவர்கள், காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட உடல்களை மீட்பு குழுவினர் மீட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று 10 வது நாளாக மீட்பு பணி நடைபெறுகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் மண்ணை தோண்டியும், கட்டிட இடிபாடுகளை அகற்றியும் உடல்கள் உள்ளதா என தேடும் பணி நேற்று நடந்தது. சாலியாற்றை ஒட்டியுள்ள சூச்சிப்பாறை, சன்ரைஸ் பள்ளதாக்கு, போத்துகல் ஆகிய வனப்பகுதிகளில் நேற்று 2-வது நாளாக 12 பேர் அடங்கிய சிறப்பு குழுவினர் உடல்கள் ஏதேனும் உள்ளதா என தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்காக இந்திய ராணுவத்தின் விமானப்படை ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த குழுவுடன் காவல்துறையின் சிறப்பு பிரிவை சேர்ந்த 4 கமாண்டோக்களும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 408 பேர் உயிரிழந்து உள்ளனர். 152 பேரை காணவில்லை. இதில் 138 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளனது. மேலும் 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வயநாடு நிலச்சரிவில் கல்வி சான்றிதழ்கள், ஆவணங்கள் மண்ணில் புதைந்தன. கிராம மக்கள் இதுவரை சம்பாதித்த உடைமைகளை இழந்துள்ளனர். முதல்-மந்திரி நிவாரண நிதி குறித்து தவறான தகவலை பரப்பிய 62 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத 88 உடல்கள் டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கேரள மந்திரி ராஜன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்