வயநாடு நிலச்சரிவு; புனரமைப்பு பணிகளுக்கு மோகன்லால் ரூ.3 கோடி நிதியுதவி

நிலச்சரிவு பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று பார்த்த பின்னரே, அழிவின் ஈர்ப்பு விசையை ஒருவரால் புரிந்து கொள்ள முடியும் என்று நடிகர் மோகன்லால் கூறியுள்ளார்.

Update: 2024-08-03 11:55 GMT

வயநாடு,

கேரளாவில் பருவமழையை முன்னிட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. இதில், கடந்த ஜூலை 30-ந்தேதி வயநாட்டில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.

இந்த பாதிப்பில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 358 ஆக உயர்வடைந்து உள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த மீட்பு பணியில், தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, போலீசார் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தன்னார்வலர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு துறை சார்ந்தவர்களும் நிதியுதவி வழங்கி வருகின்றனர். இதன்படி, அண்மையில் நடிகர் விக்ரம், சூர்யா, ஜோதிகா, கார்த்தி உள்ளிட்ட தமிழ் சினிமா பிரபலங்கள் கேரள முதல்-மந்திரியின் பேரிடர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கினர்.

இதேபோன்று, மலையாள திரையுலகை சேர்ந்த நடிகர் மம்முட்டி மற்றும் அவரது மகனான நடிகர் துல்கர் சல்மான் இணைந்து ரூ.35 லட்சம் நன்கொடை அளித்தனர். மேலும் பல சினிமா பிரபலங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பத்ம பூஷண் விருது பெற்றவரான நடிகர் மோகன்லால், மேப்பாடி பகுதியில் வெள்ளம் பாதித்த இடங்களுக்கு இன்று நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் திரைப்பட இயக்குநர் மேஜர் ரவியும் சென்றார்.

முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு நேற்று ரூ.25 லட்சம் வழங்கினார். இந்நிலையில், பேரிடரில் உயிர் தப்பியவர்களுக்கு, விஸ்வ சாந்தி தொண்டு நிறுவனம் சார்பில் ரூ.3 கோடி நன்கொடையாக வழங்கப்படும் என நடிகர் மோகன்லால் இன்று அறிவித்து உள்ளார்.

இதுதவிர, சூரல்மலா பகுதியில் உள்ள வெள்ளரிமலா பள்ளிக்கூட புனரமைப்பு பணிகளுக்கு உதவுவேன் என்றும் கூறியுள்ளார். முண்டக்கை, புன்சிரி மட்டம் மற்றும் சூரல்மலா பகுதிகளில் 10 நிமிடங்கள் வரை இருந்து, நிலச்சரிவின் பாதிப்புகளை ஆய்வு மேற்கொண்டார். பேரிடரின் பாதிப்புகளை பற்றி அறிந்து கொள்வதற்காக ராணுவம் மற்றும் மீட்பு பணியாளர்களிடம் உரையாடினார்.

அவர் கூறும்போது, நிலச்சரிவு பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று பார்த்த பின்னரே, அழிவின் ஈர்ப்பு விசையை ஒருவரால் புரிந்து கொள்ள முடியும். மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு உள்ள ராணுவம் மற்றும் பிற தன்னார்வலர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.  இந்த சவாலான தருணத்தில், மக்கள் ஒன்றிணைந்து இருந்து, நம்முடைய மீள்திறனை வெளிப்படுத்துவோம் என்று கூறியுள்ளார்.

இதுபற்றி சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்ட செய்தியில், சுயநலமற்ற தன்னார்வலர்கள், காவலர்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, தேசிய பேரிடர் மீட்பு படை, ராணுவ வீரர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் ஓய்வின்றி உழைக்கும் ஒவ்வொரு நபரின் தைரியத்திற்கும் நான் வணக்கம் தெரிவிக்கிறேன் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்