குப்பை பொருள்: மம்தா பானர்ஜி கருத்தை விமர்சித்த கவர்னர் அலுவலகம்

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவிப்பிரமாணத்தை தடுக்க கவர்னருக்கு உரிமையில்லை என்று மம்தா பானர்ஜி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.;

Update:2024-06-28 18:15 IST

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி - கவர்னர் ஆனந்த போஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் அங்கு 2 தொகுதிகளுக்கு சமீபத்தில் நடந்த இடைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த சயந்திகா பந்தோபாத்யாய் மற்றும் ரயத் உசைன் சர்கார் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

அவர்கள் வழக்கப்படி சட்டசபையில் பதவி பிரமாணம் ஏற்க வேண்டும். ஆனால் கவர்னர், அவர்களை தனது அலுவலகமான ராஜ்பவனுக்கு வந்து பதவியேற்கும்படி கூறியிருந்தார். திரிணாமுல் காங்கிரஸ் எம் எல் ஏ க்கள் மரபுப்படி சட்ட சபையில் பதவியேற்க விரும்பினர்.

நேற்று முன்தினம் சட்டசபை கூடியபோது 2 புதிய எம் எல் ஏ க்களும் கவர்னரின் வருகைக்காக பதவியேற்க காத்திருந்தனர். ஆனால் மாலை வரை காத்திருந்தும் கவர்னர் வரவில்லை. அவர் டெல்லி சென்றுவிட்டார். இதனால் எம்.எல்.ஏ.க்கள் கையில் பதாகையுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் நேற்று 2-வது நாளாகவும் நீடித்தது. அவர்கள் அம்பேத்கர் சிலை முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் குறித்து மம்தா பானர்ஜி நேற்று தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-

எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்று ஏறத்தாழ ஒருமாத காலம் ஆகிவிட்டது. அவர்களால் இன்னும் பதவியேற்க முடியவில்லை. கவர்னர் அவர்களை பதவியேற்கவிடாமல் தடுக்கிறார். அவர்களின் நேரம் வீணாகிறது. அவர்களை தேர்ந்தெடுத்தது மக்கள்தான். கவர்னர் அல்ல. அவர்கள் பதவிப்பிரமாணம் செய்ய உரிமை உள்ளது. இந்த செயல்முறையை தடுக்க கவர்னருக்கு உரிமை இல்லை.

பதவிப் பிரமாணத்திற்காக எல்லோரும் ஏன் கவர்னர் மாளிகைக்கு செல்ல வேண்டும். சட்டசபைக்கு கவர்னர் வரலாம். அவரால் வர முடியாவிட்டால் சபாநாயகர் அல்லது துணை சபாநாயகரிடம் பதவிப் பிரமாணம் செய்யும் பொறுப்பை ஒப்படைக்கலாம். சமீபத்தில் கவர்னர் மாளிகையில் நடந்த சம்பவங்களால் அங்கு செல்ல பயப்படுவதாக பெண்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மம்தா பானர்ஜியின் இந்த கருத்துக்கு கவர்னர் அலுவலகம் கருத்து தெரிவித்துள்ளது. அதில், இன்றைய செய்தித்தாள்களில் வெளியாகியுள்ள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் தீங்கிழைக்கும் வகையிலான விமர்சனத்தை கண்டுகொள்வதோ அல்லது குப்பை பொருளுக்கு பதிலளிப்பதோ பொருத்தமற்றது என ராஜ் பவன் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்