தள்ளுவண்டியில் வடா பாவ் விற்று தினமும் ரூ. 40 ஆயிரம் சம்பாதிக்கும் இளம்பெண்

ஸ்மார்ட்போன் பார்ப்பதை தியாகம் செய்ய வேண்டும் என்று சந்திரீக தீக்சித் கூறியுள்ளார்.

Update: 2024-06-24 15:02 GMT

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள ஒரு தெருவில் தள்ளுவண்டி கடை மூலம் வடா பாவ் விற்பனை செய்யும் சந்திரிகா தீக்சித் என்ற பெண் தினமும் ரூ.40 ஆயிரம் வருமானம் ஈட்டி வருகிறார். இது சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அவர் பிக்பாஸ் ஓடிடி 3 நிகழ்ச்சியில் பங்கேற்று நாடு முழுவதும் பிரபலமாகியுள்ளார்.

நன்றாக படித்துள்ள சந்திரிகாவுக்கு ஒரு நல்ல வேலை கிடைத்தது. ஆனால் அவருக்கு சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்து வந்தது. இதையடுத்து அவர் தள்ளுவண்டியில் வடா பாவ் விற்க முடிவு செய்தார்.அவர் டெல்லியில் உள்ள தெருவில் தள்ளுவண்டியில் விற்கும் வடா பாவ் உணவை மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி செல்கின்றனர். இதனை சுவையாக தயார் செய்வதால் சந்திரிகாவுக்கு பொதுமக்கள் வடா பாவ் கேர்ள் என்ற பட்டத்தையும் வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து சந்திரிகா தீக்சித் அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- நான் வடா பாவ் விற்று கடினமாக உழைப்பதன் மூலம் தினமும் ரூ.40 ஆயிரம் வரை சம்பாதிக்கிறேன். அனைவரும் இதேபோன்று சம்பாதிக்கலாம்.

ஆனால் அதற்கு ஸ்மார்ட்போன் பார்ப்பதை தியாகம் செய்ய வேண்டும். 2 வருடங்களுக்கு முன்பு தெருவோரத்தில் தள்ளுவண்டியில் சாதாரணமாகத்தான் தொழிலை ஆரம்பித்தேன். ஆனால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கடினமாக உழைத்தேன். இதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு எனது மகனுக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதே எனது லட்சியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்