கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவர்... இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு பேடரஹள்ளி அருகே ஆந்திரஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் திலீப் (வயது 30). இவரது மனைவி மானசா (25). இந்த தம்பதிக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இருந்தது. இவர்களுக்கு 5 வயதில் மகள் இருக்கிறாள். திருமணத்தின்போது திலீப்பிற்கு வரதட்சணை கொடுக்கப்பட்டது. எனினும் கூடுதல் வரதட்சணை கேட்டு மானசாவை அவர் கொடுமைப்படுத்தி உள்ளார். மேலும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக வேறு பெண்ணுடன் திலீப் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இது மனைவி மானசாவுக்கு தெரியவந்தது.
உடனே இதுபற்றி திலீப்பிடம் அவர் கேட்டதுடன், கள்ளக்காதலை கைவிட வலியுறுத்தியுள்ளார். ஆனால் திலீப் கள்ளக்காதலை கைவிட மறுத்துள்ளார். இது தொடர்பாக தம்பதி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மானசாவும் கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரை குடும்பத்தினர் சமாதானப்படுத்தி கணவருடன் சேர்ந்து வாழ அனுப்பி வைத்தனர். இதையடுத்து திலீப்புடன் மானசா மீண்டும் சேர்ந்து வாழ தொடங்கினார்.
இந்த நிலையில் நேற்று கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த மானசா, வீட்டின் ஒரு அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தான் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்வதை செல்போன் மூலம் சமூக வலைதள பக்கத்தில் நேரலையில் வெளியிட்டார்.
இதனை பார்த்த கணவர் குடும்பத்தினர் பேடரஹள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே தகவலின்பேரில் போலீசார் விரைந்து வந்தனர். அதற்குள் அவர் தூக்குப்போட்டு உயிரை மாய்த்து கொண்டார். இதையடுத்து மானசா உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலை கைவிட கணவர் மறுத்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.