பைக் மீது மோதிய பஸ்... அடுத்து நடந்த டுவிஸ்ட்; வீடியோ வைரல்

இ-ரிக்சா கூட்டம் குறைந்த பகுதியில் நின்றதும், கட்டண தொகையை கொடுத்து விட்டு, பெண்ணின் தங்க காதணியை பறித்து கொண்டு அந்த நபர் ஓடுகிறார்.;

Update:2024-06-02 11:54 IST

கர்னால்,

அரியானாவின் கர்னால் பகுதியில் 2 பேர் கூட்டு சேர்ந்து பெண்ணிடம் இருந்து செயினை பறிக்க திட்டம் போட்டுள்ளனர். இதன்படி, அந்த பெண் செல்லும் இ-ரிக்சாவில் கொள்ளையர்களில் ஒருவர் ஏறியிருக்கிறார். அவருடைய கூட்டாளி அவர்களை பின்தொடர்ந்து வந்திருக்கிறார்.

அப்போது, கூட்டம் குறைந்த பகுதிக்கு வந்ததும் இ-ரிக்சாவில் இருந்த நபர், இறங்கி கொள்கிறேன் என கூறியிருக்கிறார். இ-ரிக்சா நின்றதும், கட்டண தொகையை கொடுக்கிறார். உடனடியாக அந்த பெண்ணின் தங்க காதணியை பறித்து கொண்டு ஓடுகிறார்.

இதற்கு முன், கூட்டாளியான மற்றொரு நபர் பைக்கில் தயாராக முன்னே சென்று சாலையின் நடுவில் நின்றிருக்கிறார். காதணியை பறித்த நபர் பைக்கை நோக்கி ஓடுகிறார். அந்த பெண் திருடன், திருடன் என கத்தி கொண்டே பின்னால் ஓடி வருகிறார். அவர்கள் இருவரும் பைக்கில் தப்ப தயாரானார்கள். அப்போது, அந்த சம்பவம் நடந்தது.

இதனை எதிரே வந்த பஸ் ஓட்டுநர் ஒருவர் கவனித்து விட்டார். அவர் விரைவாக வந்து அந்த பைக் மீது மோதினார். இதனால், அந்த நபர்கள் இருவரும் பைக்கில் இருந்து கீழே விழுந்தனர். தப்பி செல்லும் கொள்ளையர்களை தடுக்கும் நோக்கில் அவர் பஸ்சால் மோதியிருக்கிறார். எனினும் பைக்கை விட்டு விட்டு அவர்கள் விரைவாக எழுந்து ஓடுகின்றனர்.

இந்த சம்பவத்தில், போலீசார் அந்த பைக்கை கைப்பற்றி சி.சி.டி.வி. காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்