தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சி அலுவலகத்திற்கு வருகை

ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்துள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார்.

Update: 2024-06-04 15:29 GMT

அமராவதி,

நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில அரசுகளின் பதவிக்காலம் 2-ம் தேதி முடிவடைந்ததால், அந்த 2 மாநிலங்களுக்கும் 2-ம் தேதியே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஆந்திரா, ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

ஆந்திராவில் உள்ள மொத்த சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை 175 ஆகும். இதில் 88 இடங்களை வெல்லும் கட்சி ஆட்சியை பிடிக்கும். இந்த தேர்தலில் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிட்டது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி 144 இடங்களிலும், ஜனசேனா கட்சி 21 இடங்களிலும், பா.ஜ.க. 10 இடங்களிலும் போட்டியிட்டது.

தற்போதைய நிலவரப்படி, தெலுங்குதேசம் கட்சி 110 இடங்களில் வெற்றி பெற்று 24 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. இதன்மூலம் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை கடந்து முன்னிலையில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் ஆட்சியை பிடித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்-மந்திரி ஆகிறார்.

ஜனசேனா கட்சி 18 தொகுதிகளில் வெற்றி பெற்று 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பா.ஜ.க. 5 தொகுதிகளில் வெற்றி பெற்று 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. அந்த கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்று 8 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்துள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார். அவரை ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் வரவேற்று கவுரவித்தார். இருவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்