புல்டோசர் நடவடிக்கை - தடை விதித்த சுப்ரீம் கோர்ட்டு

நீதிமன்றத்தின் அனுமதியின்றி எந்தப் பகுதிகளிலும் கட்டிடங்களை இடிக்கக் கூடாது என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-09-17 11:23 GMT

புதுடெல்லி,

உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில், 'புல்டோசர் நடவடிக்கை' என்கிற பெயரில், குற்றம் செய்தவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் குற்றம் செய்யப்பட்டவர்கள் வீடுகள் மட்டுமன்றி, மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துபவா்களின் வீடுகளும் இடிக்கப்படுவதாக புகார் எழுந்தது.

இந்த புல்டோசர் நடவடிக்கை சட்டத்திற்குப் புறம்பானது என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் கூறுகையில், குற்ற வழக்கில் தொடா்புடையவா் அல்லது குற்றவாளி என்பதற்காக ஒருவரின் வீட்டை எப்படி இடிக்க முடியும்? உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் இதுபோன்று செய்ய முடியாது. இதுதொடா்பாக, நாடு முழுமைக்குமான வழிகாட்டுதலை சுப்ரீம் கோர்ட்டு வகுக்கும் என்று குறிப்பிட்டு, விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்திருந்தனர்.

இந்த வழக்கு தொடர்பான மனுவை நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு விசாரித்து வருகின்றது. இந்நிலையில் இன்று நடந்த வழக்கு விசாரணையின்போது, இந்த வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சட்டப்பூர்வ நடைமுறைகளைப் பின்பற்றியே கட்டிடங்கள் இடிக்கப்படுவதாகவும், குறிப்பிட்ட சமூகத்தை குறிவைப்பதாக கூறுவது தவறான கருத்து என்றும் வாதிட்டார்.

இதனையடுத்து நீதிபதிகள் கூறுகையில், "நீதிமன்றத்துக்கு வெளியே குறிப்பிட்ட சமூகத்தினர் குறிவைக்கப்படுகிறார்களா..? இல்லையா..? என்ற விவாதத்துக்கு நாங்கள் செல்லமாட்டோம். சட்டவிரோதமாக கட்டடங்கள் இடிக்கப்பட்டால், அது அரசியலமைப்புக்கு எதிரானது. சட்டவிரோத கட்டுமானத்துக்கு பாதுகாப்பு அளிக்கவில்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம். நிர்வாகிகள் நீதிபதிகளாக முடியாது. கட்டுமானங்களை இடிப்பதற்கான செயல்முறை விதிகளை சீரமைக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்

மேலும் பொது தெருக்கள், நடைபாதைகள், ரெயில் பாதைகள், நீர்நிலைகள் அல்லது பொது இடங்களில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை அகற்ற இதுபோன்ற நடவடிக்கைகள் தேவைப்படும் வழக்குகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 1-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், அதுவரை நாட்டின் எந்தப் பகுதிகளிலும் கட்டிடங்களை இடிக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்