பயிற்சி மையத்தில் மாணவர்கள் பலியான சம்பவம் - டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்

பயிற்சி மையத்தில் மாணவர்கள் பலியான சம்பவம் தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-07-30 10:01 GMT

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 27-ந்தேதி, பரவலாக பெய்த கனமழையால், பழைய ராஜீந்தர் நகர் பகுதியில் தரை தளத்திற்கு கீழே அடித்தளத்தில், ஐ.ஏ.எஸ். படிப்பவர்களுக்காக செயல்பட்டு வந்த பயிற்சி மையத்திற்குள் வெள்ள நீர் புகுந்தது. 30 பேர் வரை படித்து வந்த அந்த மையத்தில்,வெள்ளத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.

அவர்களில் 2 பேர் மாணவிகள். ஒருவர் மாணவர் ஆவார். அவர்கள், உத்தர பிரதேசத்தின் அம்பேத்கார் மாவட்டத்தில் வசித்து வந்த ஸ்ரேயா யாதவ், தெலுங்கானாவைச் சேர்ந்த தன்யா சோனி மற்றும் கேரளாவின் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த நிவின் தல்வின் என தெரிய வந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, டெல்லியில் மாணவர்கள் கடந்த திங்கட்கிழமை இரவு மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்று, போராட்டத்தில் ஈடுபட்டனர். அலட்சியத்துடன் செயல்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், பயிற்சி மையத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என நீதிபதி மன்மோகன், நீதிபதி துஷார் ராவ் கடேலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வழக்கறிஞர் ருத்ரா விக்ரம் சிங் முறையிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் முறையாக தாக்கல் செய்யப்பட்டால், நாளைய தினம் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்