சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது

டெல்லியில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-08-03 12:27 GMT

புதுடெல்லி,

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சலி(வயது 26) என்ற மாணவி, டெல்லியில் உள்ள ராஜேந்திர நகர் பகுதியில் தங்கியிருந்து சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வந்தார். இவர் 3 முறை யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதியும் வெற்றி பெற முடியாததால், மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த மாதம் 21-ந்தேதி அஞ்சலி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவர் எழுதிய உருக்கமான கடிதம் தற்போது போலீசாரிடம் சிக்கியுள்ளது. அந்த கடிதத்தில் அஞ்சலி, தான் சந்தித்து வந்த பல்வேறு பிரச்சினைகள் குறித்து எழுதியிருக்கிறார்.

அந்த கடிதத்தில், தனது தாய், தந்தையிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், தனக்கு ஏற்பட்டுள்ள தீவிர மனச்சோர்வில் இருந்து தன்னால் விடுபட முடியவில்லை என்றும் அஞ்சலி குறிப்பிட்டுள்ளார். அதோடு, அரசு தேர்வுகள் மற்றும் அரசு பணிகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஏராளமான இளைஞர்கள் இந்த பணிகளை பெறுவதற்காக போராடி வருகிறார்கள் என்றும் அஞ்சலி தனது கடிதத்தில் கூறியிருக்கிறார்.

மேலும் விடுதி உரிமையாளர்கள் வாடகையை உயர்த்தி மாணவர்களை சுரண்டுவதாகவும், அனைத்து மாணவர்களாலும் அவ்வளவு வாடகை தொகையை செலுத்திவிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ள அவர், தனது உடல் உறுப்புகளை தானம் செய்து விட வேண்டும் என தனது பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அண்மையில் அதே பகுதியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர்கள் 3 பேர் மழை வெள்ளத்தில் சிக்கி பலியான நிலையில், மற்றொரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்