நீட் தேர்வில் 2 விதமான மோசடிகள் நடந்துள்ளன ; மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் திடுக் தகவல்

நீட் தேர்வு மோசடிகளை அரசு இதுவரை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாத நிலையில், தற்போது 2 விதமான முறைகேடுகள் நடந்திருப்பதாக கல்வி மந்திரியே ஒப்புக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2024-06-18 02:42 GMT

புவனேஸ்வர்

இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்காக சமீபத்தில் நடத்தப்பட்ட நீட் தேர்வு பெரும் சர்ச்சைகளை கிளப்பி இருக்கிறது. வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண் என பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ளன.பல்வேறு முறைகேடு புகார் கிளம்பி இருப்பதால் இந்த தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.மேலும் நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ. அல்லது சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையிலான விசாரணை நடத்த வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

மறுபுறம் நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அந்தவகையில் குஜராத்தில் 5 பேர், பீகாரில் 13 பேர் என அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.இவ்வாறு விசாரணை நடவடிக்கைகள் தீவிரமடைந்து இருக்கும் நிலையில், நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் உறுதிபட தெரிவித்து உள்ளார்.இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நீட் தேர்வு நடத்தியதில் 2 விதமான முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்து உள்ளன.இதில் முதற்கட்ட தகவல்களின்படி, தேர்வின்போது நேரமின்மைக்காக சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளது.ஆனால் கருணை மதிப்பெண் கொடுத்ததை அரசு ஏற்கவில்லை. எனவே அந்த மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி மறுதேர்வு நடத்த அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.இதைப்போல 2 இடங்களில் கூடுதல் தவறுகள் நடந்திருப்பது வெளியாகி இருக்கிறது.இந்த பிரச்சினையை அரசு மிகவும் தீவிரமாக எடுத்து இருக்கிறது என்பதை மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்.

இதை நாங்கள் ஒரு தர்க்க ரீதியான முடிவுக்கு கொண்டு வருவோம்.இந்த முறைகேட்டில் தேசிய தேர்வு முகமை மூத்த அதிகாரிகள் உள்பட எந்த அதிகாரிகளும் தவறு இழைத்திருந்தாலும் அவர்கள் தப்ப முடியாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.தேசிய தேர்வு முகமை ஒரு தன்னாட்சி அமைப்பாக இருந்தாலும், அதில் ஏராளமான சீர்திருத்தங்கள் தேவைப்படுகிறது. இது குறித்து அரசு கவலைப்படுகிறது. எந்த குற்றவாளியும் தப்ப முடியாது என மீண்டும் உறுதியளிக்கிறேன். தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்