ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம்: பிரதமர் மோடியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு
வங்காள தேசத்தில் சலிமுல்லா கான் தலைமையில் இடைக்கால அரசு அமைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,
வங்காள தேசம் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா (வயது 76), இந்தியா தப்பி வந்துள்ளார். இதனிடையே வங்காள தேச நாடாளுமன்றத்தை மாணவர்கள் , போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். முன்னதாக பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்ட மாணவர்கள், போராட்டக்காரர்கள், அங்குள்ள பொருட்களை சூறையாடினர். மாணவர்கள், போராட்டக்காரர்களால் டாக்காவில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதற்கிடையே சலிமுல்லா கான் தலைமையில் இடைக்கால அரசு அமைய உள்ளதாக அந்நாட்டு ராணுவம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியா தப்பி வந்துள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, டெல்லியில் லஜ்பத் நகரில் ரகசிய இடத்தில் தங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேறி இங்கிலாந்து செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் வங்காள தேசத்தில் இருந்து வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள நிலையில், டெல்லியில் பிரதமர் மோடியை வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை மந்திரியை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி சந்தித்தார். வங்காளதேசம் விவகாரம் குறித்து மத்திய மந்திரி ஜெய்சங்கருடன் கேட்டறிந்தார்.