நீட் வழக்கு: 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்டு

நீட் மறு தேர்வு நடத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Update: 2024-07-11 09:35 GMT

புதுடெல்லி,

இளநிலை மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் மற்றும் அது தொடர்பான படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு கடந்த மே 5ம்தேதி நடந்தது. இதன் முடிவு, ஜூன் 4ம் தேதி வெளியானது. இந்த தேர்வில், இதுவரை இல்லாத அளவுக்கு, 67 பேர் 720க்கு 720 மதிப்பெண் பெற்றனர். இந்தநிலையில், வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியதில் சர்ச்சை உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து, மறு தேர்வு நடத்தக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், நீட் தேர்வு முறைகேட்டின் தீவிரத்தின் அடிப்படையிலேயே மறுதேர்வை நடத்துவதா, இல்லையா என்று முடிவு செய்யப்படும் என முந்தைய விசாரணையின்போது சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

இதுதொடர்பாக மத்திய அரசு இன்று தாக்கல் செய்த கூடுதல் பிரமாணப் பத்திரத்தில், 'நீட் தேர்வு முடிவுகளின் தரவுகளை வைத்து சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில், அசாதாரண சூழல் ஏதும் இல்லை என்பது தெரியவருகிறது. நிகழாண்டுக்கான மருத்துவக் கலந்தாய்வு ஜூலை மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கி நான்கு கட்டங்களாக நடைபெற உள்ளது' என்று தெரிவித்துள்ளது.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசு பதில்களை தாக்கல் செய்துள்ளனர். ஆனால், சில மனுதாரர்களுக்கு அதன் நகல்கள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை. அரசின் விளக்கத்துக்கு அவர்களின் பதிலையும் எதிர்பார்ப்பதால் வரும் 18-ம் தேதி ஒத்திவைப்பதாக தலைமை நீதிபதி தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்