ரூ.90 ஆயிரம் கோடிக்கு அடுத்த மாதம் ஒப்பந்தம் உறுதி செய்யப்படும்: இந்திய கடற்படை தளபதி
இந்திய பெருங்கடல் பகுதியில், சீன கடற்படையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என இந்திய கடற்படை தளபதி திரிபாதி இன்று கூறியுள்ளார்.;
புதுடெல்லி,
டெல்லியில் வருடாந்திர கடற்படை நாள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு இந்திய கடற்படை தளபதி தினேஷ் கே. திரிபாதி இன்று பேசினார். அவர் கூறும்போது, அடுத்த மாதத்திற்குள் ரபேல் விமானங்கள், 3 ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கி கப்பல்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் உறுதி செய்யப்படும் என நம்புகிறோம் என்றார்.
இதன்படி, ரூ.90 ஆயிரம் கோடி மதிப்பில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். பிரான்ஸ் நாட்டிடம், 26 ரபேல் வகை போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்காக இந்திய கடற்படை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மஜகாவன் கப்பல் கட்டும் நிறுவனத்தில், கூடுதலாக 3 ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கி கப்பல்களை கட்டுவதற்காக பிரான்ஸ் கடற்படை குழுவினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே 6 ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கி கப்பல்கள் இந்த கப்பல் கட்டும் நிறுவனத்தில் கட்டப்பட்டு உள்ளன. அவற்றுடன் இந்த 3 நீர்மூழ்கி கப்பல்களும் இணையும். உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. எங்களுடைய கடற்படை இந்திய பெருங்கடல் பகுதியில், சீன கடற்படையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்றும் இந்திய கடற்படை தளபதி திரிபாதி இன்று பேசும்போது கூறியுள்ளார்.